“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய், திமுகவை விமர்சித்து பேசிய பிறகு புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என திருமாவளவன் அறிவித்தார்.
இந்நிலையில் அந்த புத்தக வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டார். இதில் பேசிய விஜய், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடாமல் திருமாவளவனுக்கு கூட்டணி தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது
என குண்டைத் தூக்கிப்போட்டார்.
அதே மேடையில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், பிறப்பால் முதல்வரை உருவாக்கும் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என திமுகவை கடுமையாக சாடியிருந்தார். கூட்டணிக்குள் இருக்கும்போதே, திமுகவை வெளிப்படையாக விமர்சித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பாக மாறியது.
இந்தியா கூட்டணியில் இருந்து விசிகவைப் பிரிக்க நினைப்பது, தேசிய அரசியலில் இருந்து திருமாவளவனை பிரிப்பதற்கு சமம் ஆகும். அதனைத் தான் ஆதவ் அர்ஜூனா முன்னெடுத்திருந்தார். கட்சியின் கொள்கைக்கு எதிராக துணைப் பொதுச்செயலாளரே பேசுகிறார் என்றால் பல்வேறு சந்தேகங்களை கிளப்பத்தானே செய்யும். ஆக, திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
அதே நேரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜயின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை
என்றார். மேலும் கட்சியில் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ ஆதவ் அர்ஜூனா பேசியது 100 சதவீதம் தவறு. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் கூட்டணி வைத்துக்கொள்வதில் எந்தவொரு கட்சிக்கும் தனித்த உரிமை உண்டு. கூட்டணி அமைத்து விட்டால் அதற்கான தர்மப்படி சற்றும் பிறழாமல் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்; அல்லது கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற விவாதம் மக்கள் மேடையில் நடந்து கொண்டிருந்தது.
இந்த விவகாரத்தில் திருமாவளவன் நல்ல முடிவை அதுவும் விரைவாக எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்ல கூட்டணிக்கட்சியினரும் எதிர்பார்த்த நிலையில் இன்றைக்கு ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.
அவரை 6 மாத காலத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் திமுகவுடனான கூட்டணிக்கு இடையூறு ஏற்படுவதை விசிக தடுத்து நிறுத்தி உள்ளது. பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில் கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்பதில் திருமாவளவன் உறுதியாக உள்ளார் என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை!