fbpx
Homeபிற செய்திகள்அ.தி.மு.க. இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய ஆவணங்கள்!

அ.தி.மு.க. இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய ஆவணங்கள்!

மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் தீர்மானம் கடும் விவாதத்திற்கு பிறகு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. நேற்று அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த பிறகு… நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை கனிம சுரங்கச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்துப் பேசிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆதாரங்களுடன் இந்த விவகாரம் சூடான விவாதங்களாக மாறி இருக்கிறது.

சட்டப்பேரவையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக எம்பி-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை` என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை மறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதிலடி கொடுத்தார்.

மேலும் அவர், தனது வலைதளப்பதிவில் தெரிவித்து இருப்பதாவது: “மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது.

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார். அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.

மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள்.

பழனிசாமியின் புளுகும் – புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சூடாகத்தான் இருந்தது.

ஆக, தி.மு.க மீது எடப்பாடி வைத்த குற்றச்சாட்டு அ.தி.மு.க.விற்கே அடியாக மாறியுள்ளது.

நாடாளுமன்ற ஆவணங்கள் மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

படிக்க வேண்டும்

spot_img