வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் குணப்படுத்த முடியாத நோய் உண்டென்றால் அது கேன்சர் (புற்றுநோய்) தான். பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலகம் தவித்தது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும் அதனை முழுமையாக குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.
இந்த நிலையில் தான், புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு நடப்பதாகவும் 2025ம் ஆண்டிலேயே இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. அதுவும் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவித்து இருப்பது கூடுதல் சிறப்பு.
கடந்த வருடம் கூட, அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் கீமோதெரபி சிகிச்சை இல்லாமலேயே 100 சதவீதம் குணமடைந்தனர். மிக சிறிய அளவில்தான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடந்த இன்னொரு ஆராய்ச்சியில் இதேபோல் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை கேன்சருக்கு எதிராக செய்துள்ளது.
ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிர வைத்து.. அந்த அதிர்வை வைத்து கேன்சர் செல்களை கொல்லும் மருத்துவத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறை 99 சதவீத செயல்திறனைக் கொண்டு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த சிகிச்சை முறை கண்டுபிடிப்புகள் எல்லாம் இன்னும் செயல்பாட்டுக்கு வராத நிலையில் தற்போது கேன்சருக்கான தடுப்பூசியையே ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இது தொடர்பாக பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், இந்த கேன்சர் தடுப்பூசி, மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்து இருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
குணப்படுத்த முடியாத நோய் கேன்சர் என்று சொற்றொடருக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ரஷ்யாவின் தடுப்பூசிகள் கிடைக்கப்போகும் அந்த நாள், உலகிற்கே ஒரு பொன்னாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதிபர் புதினையும் ரஷ்ய விஞ்ஞானிகளையும் எத்தனை பாராட்டினாலும் தகும்!