மனிதர்களின் வாழ்க்கைப்பாதையில் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரை எடுத்துக் கொண்டால் ஓரிரு வீடுகளில் தான் டி.வி இருக்கும்.
அரைமணி நேரம் ஒளிபரப்பான ஒலியும் ஒளியும்
பாடல்களைப் பார்க்க டிவி முன் ஊரே கூடும். இன்றைக்கு டிவி இல்லாத வீடு உண்டா? அதேபோல வானொலி, விமானம், கணினி, இணையம், செல்போன், மின்வணிகம், வங்கிச் சேவைகள் என பலவற்றைச் சொல்லலாம். அறிவியல் முன்னேற்றத்தின் புது விளிம்பில் உலகம் இப்போது உள்ளது.
அதே சமயத்தில் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் இதுபோன்ற மாற்றங்கள் அசுர வேகத்தில் நடந்துவிடுவதில்லை. அமைதியாய்த் தொடங்கி, மெதுவாய்ப் படர்ந்து, மனிதனின் வாழ்க்கையில் இரண்டற கலந்து விடுகிறது. ஒன்றரை வயது குழந்தை கூட செல்போனைக் கேட்டு அடம்பிடிக்கும் நிலை உருவாகி விட்டது. அது தவறாக இருந்தாலும் தவிர்க்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர்.
2025ஆம் ஆண்டு, முக்கிய மாற்றங்களுக்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமையும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதில் முதன்மையாகப் பேசப்படுவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence).
சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான செயற்கை நுண்ணறிவு, இன்றைக்கு நம்மை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது. நம் தேவைக்கேற்ப, நாம் கேட்டுக்கொள்வதன்படி, நமக்கு வேண்டியதை தரும் ஆற்றல் வாய்ந்தது இத்தொழில்நுட்பம்.
கணக்கிலடங்கா தரவுகளைக் கொண்டு, ஒருவகையான உள்ளுணர்வுத் தன்மையோடு எழுத்து, உள்ளடக்கம், படம், இசை, காணொளி, வசனம் எனப் பன்முகப் படைப்புகளை வழங்கும் திறனுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு, இவ்வாண்டில், நம் அன்றாட வாழ்வின் பல பகுதிகளிலும் ஊடுருவும்.
மாணவர்களின் கல்விப் பயணத்தில் Chat-GPT, Gemini, Copilot போன்ற பல செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் கற்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவத் தொடங்கிவிட்டன.
மருத்துவத்துறையில் நோயறிதல் துல்லியத்தை மேம்படுத்துதல்; சிகிச்சைத் திட்டங்களை அவரவர்களுக்கேற்ப தனிப்பயனாக்குதல் என்று செயற்கை நுண்ணறிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், கைப்பேசிகளின் திறன் பன்மடங்கு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6ஜி அலை கட்டமைப்பிற்காகப் பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகத் தளங்களில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது சவால்களையும் வாய்ப்புகளையும் வழங்கும். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து குறைக்க செயற்கை நுண்ணறிவு உதவ முடியும் என்றாலும், தவறான தகவல்களின் பெருக்கம் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது.
இப்புதிய அலையை நிறுத்தமுடியாது. அதனை ஒரு நற்கருவியாக மட்டுமே பயன்படுத்தவேண்டியது அவசியம் என்ற கருத்தையும் புறந்தள்ளிவிட முடியாது.
மொத்தத்தில், இவ்வாண்டில் செல்போன் பயன்பாட்டைப் போல செயற்கை நுண்ணறிவும் அனைவருக்கும் அன்றாடப் பயன்பாடாய் மாறிவிடும். இம்மாற்றங்களை வரவேற்று, நமது வசதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.
புதியதோர் எதிர்காலம் காத்திருக்கிறது. தவிர்க்க முடியாத அந்த பாதையில் ஜாக்கிரதையாகப் பயணிக்க நம்மை தயார்படுத்தி பயன்பெறுவோம்!