fbpx
Homeபிற செய்திகள்மோடி - டிரம்ப் சந்திப்பால் ‘மெகா’ வெற்றி மலரட்டும்!

மோடி – டிரம்ப் சந்திப்பால் ‘மெகா’ வெற்றி மலரட்டும்!

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். உலகமே உற்று நோக்கிய இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்தார்.

முக்கியமாக இந்தியா – அமெரிக்கா இடையே ஒரு புதிய பரஸ்பர வரித் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்தார். “இந்தியா எங்களிடம் இருந்து எந்த அளவுக்கு வரி வசூலிக்கிறதோ, அதே அளவில்தான் நாங்களும் அந்நாட்டிடம் இருந்து வரி வசூலிப்போம்“, என்று அவர் உறுதி அளித்திருப்பது இருநாட்டு உறவிற்கு புதியதோர் பாலம் அமைப்பதற்கான உந்துதல் ஆகும்.

இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய பிரதமர் மோடி, அதிபர் டிரம்பின் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவது (‘maga’ (make America great again ) என்ற முழக்கத்தை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டினார்.

“இந்தியாவையும் அதே போல சிறந்த நாடாக்க வேண்டும். இந்த இரண்டு ‘maga’சிந்தனைகளும் ஒன்று சேரும்போது அது ‘மெகா’ வெற்றியாக மாறும். இரு நாடுகளும் செழிப்பான வளர்ச்சிக்கான ‘மெகா கூட்டாண்மையை’ உருவாக்கும்“, என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆக, டிரம்ப் – மோடி சந்திப்பு ஆக்கப்பூர்வமாகவும் நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் நடந்து முடிந்திருப்பது இரு பெரும் ஜனநாயக நாடுகளின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்தூன்றும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்காக பெருமுயற்சியுடன் பொறுமையாக பிரதமர் மோடி கையாண்ட ராஜதந்திர அணுகுமுறைக்கு மாபெரும் வெற்றி கிட்டியிருக்கிறது. அதற்காக அவருக்கும் நம் நாட்டிற்கான அனுகூலமான செய்திகளைப் பகிர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் பாராட்டுகளை உரித்தாக்குவோம்!

படிக்க வேண்டும்

spot_img