fbpx
Homeபிற செய்திகள்வடமாநிலத்தவர்களால் தமிழ்நாடு தேய்கிறதா?

வடமாநிலத்தவர்களால் தமிழ்நாடு தேய்கிறதா?

நாள்தோறும் அதிகாலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் வடமாநில ரயில்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் இறங்குகிறார்கள்.

இதேபோல கோவை, திருப்பூர் போன்ற நகரங்களின் ரயில்நிலையங்களிலும் ஏராளமான வட மாநிலத்தவர்கள் வந்திறங்குகின்றனர்.

இப்போது தமிழகம் முழுவதும் நாற்று நடுதல், களையெடுத்தல் உள்ளிட்ட விவசாயம் முதல், மருத்துவமனைகள் வரை பலவிதமான வேலைகளையும் அவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். வாய்ப்புகள் இருக்குமிடத்தைத் தேடி வருவது மனித இயல்பு.

இவர்களின் வருகையால் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகின்றனவா? இதே நிலைமை நீடித்தால் நாளை தமிழகத்தின் அரசியலில் கூட முக்கிய இடத்தை ஆக்கிரமிக்கும் அளவிற்கு வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் மட்டுமே பல்வேறு வேலைகளைச் செய்து வருவதாகக் கூறப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் இப்போது வடமாநிலங்களைச் சேர்ந்த ஒன்றரை கோடி பேர் குடியேறி உள்ளதாக பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன.
வடமாநிலத்தவர்கள் தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கின்றனர், ‘குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார்கள்’ என சாக்குபோக்கு சொன்னாலும் அதன் உண்மைத்தன்மை ஆராயத்தக்கது.

ஏனெனில், கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வானுயர்ந்த கட்டடங்கள், பிரம்மாண்ட பாலங்கள் அனைத்திலும் வடமாநிலத் தொழிலாளர்களின் ரத்தமும் வியர்வையும் நீக்கமறக் கலந்திருக்கின்றன. சிலரின் உயிரும் கலந்திருக்கிறது,” என்பதையும மறுக்க முடியாது.

2023-24 பொருளாதார ஆய்வின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 8.5% பங்களிக்கிறது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

கல்வியில் வடமாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேறியுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. உ.பி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை விட, தமிழகத்தில் கல்விக்கான அடித்தளம் மிக வலுவாக உள்ளது.

எனவே, உயர்கல்வி மேற்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் கடின உடலுழைப்பு தேவைப்படும் தொழில்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்போது, இயல்பாகவே வேலைவாய்ப்பு தருவோரின் பார்வை வேறு இடங்களில் பதிகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூர் மக்கள் தவிர்க்கும் கடினமான பணியைக்கூட குறைந்த ஊதியத்தில் செய்வதால் தான் அவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைதருவோர் வாய்ப்புகளை அள்ளித் தருகிறார்கள்.

உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடும் வடமாநிலத்தவர்களுக்கு அதிகபட்சமாக, 10,000 முதல் 14,000 ரூபாய் மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், அதே பணிக்கு உள்ளூர் ஆட்களுக்கு தினமும் தலா ரூ.1000 ஊதியம் தரவேண்டியிருக்கிறது.

மேலும் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட 30,000 சிறிய, பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. அதனால் தான் வடமாநிலத் தொழிலாளர்கள் நம்பிக்கையோடு தமிழ்நாடு நோக்கி படையெடுக்கிறார்கள்.

ஒருகாலத்தில், ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பார்கள். இந்நிலை விரைவில் மாறக்கூடுமோ என்று அஞ்சும் சூழல் இன்றைக்கு உருவாகி வருகிறது.
அதோடு, இந்தி மொழியைக் கட்டாயமாக்கவும் மத்திய அரசு தொடர் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

புலம்பெயர் வட மாநிலத்தவர்களுக்கு, எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்பன போன்ற சலுகைகளைத் தருவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இதே நிலை நீடித்தால், ‘வடக்கு வாழ்கிறது, அதுவும் தெற்கில் அமர்ந்தபடி வாழ்கிறது’ என்ற நிலை ஏற்பட்டுவிடும்,` என்று தமிழ்நாட்டின் சமூக ஆர்வலர்கள் கவலைப்படுவதை புறந்தள்ளிவிட முடியாது!

படிக்க வேண்டும்

spot_img