திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று (18ம் தேதி) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் ரூ.55.49 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 23.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய குடிநீர் திட்ட பைப்லைன் அமைக்கப்படுகிறது.
மேலும் 17.50 கிலோ மீட்டர் நீளத்தில் பைப் லைன் புதைக்கும் பணிகள் முடிவுற்று மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து, அம்ரூத் 2.0 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.105.82 கோடி மதிப்பீட்டில் விடுப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் பணியானது தற்போது வரை 175 எண்ணிக்கையிலான Manhole அமைக்கும் பணிகள் முடிவுற்று 750 மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, மீதமுள்ள இடங்களில் பணிகளை மேற்கொள்ள வரப்பெற்ற தளவாட பொருட்களின் தரத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், திருவண்ணாமலை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிதி 2021- 22ன் கீழ் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து திருவண்ணாமலை மாநகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய இடமாகவும், மாநகராட்சிக்கு சொந்தமான இடமாகவும் உள்ள காந்தி நகரில் காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.32.16 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் பூச்சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதியதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் தரைத்தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல் தளத்தில் 121 பூக்கடைகளும் என மொத்தம் 249 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.