நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் மாபெரும் நெகிழி விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவு சேகரிப்பு இயக்கத்தின் கீழ், நெகிழி குப்பை சேகரிப்பு பணியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நெகிழிப் பொருட்களை சேகரித்து அகற்றுதல், நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு முகாம் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மார்ச் 22 அன்று பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் மாபெரும் நெகிழி விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவு சேகரிப்பு இயக்கத்தின் கீழ், நெகிழி குப்பை சேகரிப்பு பணியை தொடங்கி வைத்து, அணை பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்த செய்திப் பலகையினை திறந்து வைத்தார். மேலும், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியின் ” நெகிழி இல்லா நாமக்கல்” என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட குரு வாசகம் மற்றும் ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து நெகிழி கழிவு சேகரிப்பு பணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சட்பை இயக்கத்தின் மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், மாபெரும் நெகிழி விழிப்புணர்வு மற்றும் நெகிழி கழிவு சேகரிப்பு இயக்கத்தில், மேல்சாத்தம்பூர், எஸ்.வி.எஸ் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் யுவ ரெட் கிராஸ் (YRC) மாவட்ட ஒருங்கிணைப்பாளர், இணைபேராசிரியர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியின் போது 72 கிலோ நெகிழி கழிவுகள் சேகரிக்கபட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ரகுநாதன் (நாமக்கல்), செந்தில்குமார் (குமாரபாளையம்) உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.