fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.3.16 கோடியில் இந்த ஆண்டு 309 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.3.16 கோடியில் இந்த ஆண்டு 309 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை திறம்பட செயல்படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தின் ஓர் அங்கமாக அங்கீகரித்து நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில் ஏனைய மக்களுக்கு இணையாக வாழ்ந்திட தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு திட்ட ங்கள் வாயிலாக பயனடைந்து வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வீதம் 10 ஆயிரத்து 525 நபர்களுக்கும், வருவாய் துறையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக 1500 ரூபாய் வீதம் 22 ஆயிரத்து 322 மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களான இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி, தக்க செயலிகளுடன் கூடிய கைபேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், செயற்கை கால், சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல், சிறப்பு சக்கர நாற்காலி உட்பட உதவி உபகரணங்கள் 1795 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூபாய் 52 கோடியே 72 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திருமண நிதியுதவி, வங்கி கடன் மானியம், ஆவின் பாலகம் அமைத்தல், கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்களின் மூலம் 3018 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூபாய் 11 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 18 நபர்களுக்கு ரூபாய் 18 லட்சத்து 32 ஆயிரத்து 400 மதிப்பிலும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 நபர்களுக்கு ரூபாய் 5 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2024-&25 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதியாண்டில் 300 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும் மற்றும் 9 நபர்களுக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஆக மொத்தம் 309 நபர்களுக்கு ரூபாய் 3 கோடியே 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டில் முதற்கட்டமாக தற்பொழுதுவரை 50 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு 55 ஆயிரத்து 352 மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளும், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) 51 ஆயிரத்து 214, இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நார்த்தாம் பூண்டி ஊராட்சியை சார்ந்த மாற்றுத்திறனாளி இளையராஜா (42) என்பவர் தெரிவித்ததாவது-:
எனது தந்தை பெயர் ராமலிங்கம். நாங்கள் நார்த்தாம்பூண்டி ஊராட்சியில் வசித்து வருகிறோம். நான் எங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்யப்படுவதை மேற்பார்வையிட்டு வருகிறேன்.

மாற்றுத்திறனாளியான நான் வெளியில் செல்ல நேர்ந்தால் குடும்பத்தினர் உதவியுடன் தான் செல்ல வேண்டும். இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தேன். மேலும் மாற்றுத்திறனாளி அடை யான அட்டையும் மற்றும் மாதாந்திர உதவித்தொகையும் பெற்று வருகிறேன்.


தற்பொழுது யாருடைய உதவியும் இன்றி இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பயன்படுத்தி நான் வெளியில் சென்று வருகிறேன். இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உறுதுணையாக இருக்கிறது.

இதுபோன்ற திட்டங்கள் வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து மேம்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மன மார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

படிக்க வேண்டும்

spot_img