குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோவையில் பிஷப் தலைமையில் பொதுமக்கள் பவனி நடைபெற்றது.கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தில் 6வது ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பாஸ்கா விழாவுக்காக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் வந்தார்.
அப்போது அவரை மக்கள் ஒலிவ மரத்தின் இலைகளைப் பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர். இதை நினைவுகூரும் விதமாக தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறை கடை பிடிக்கின்றனர்.
அந்த வகையில், குருத்தோலை ஞாயிறான இன்று காலை 7.30 மணிக்கு பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி தொடங்கியது. ‘’முதன்மை குரு ஜான் ஜோசப் தனிஷ், பங்குத் தந்தை ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு குருத் தோலை பவனியைத் தொடங்கி வைத்தனர்.
சாமியார் புது வீதியில் தொடங்கி குருத்தோலை பவனி தூய மைக்கேல் அதி தூதர் பேராலயம் வரை சென்றது. அங்கு பொதுமக்கள் திருப்பலி மேற்கொண்டனர். தொடர்ந்து சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் மற்றும் பேராலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.