திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டுமென தமிழக பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக எங்கள் கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எனவே சீமானுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறேன்
என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்பதில் உறுதியாக உள்ளார், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.
இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது 8% வாக்கு வங்கியை கைவசம் வைத்துள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக கட்சியும் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே கொள்கை வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. இனி அக்கட்சிகள் இடையே கூட்டணி அமைய வாய்ப்பில்லை.
இதனையடுத்தே சீமானுக்கு வலைவீசியுள்ளார் நயினார் நாகேந்திரன். பாஜகவுடனும் கொள்கை முரண்பாடு கொண்டவர் தான் சீமான். ஒருவேளை பாஜக & அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்தாலும் அது எத்தனை காலம் நீடிக்கும்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
சீமான் உடனடியாக முடிவெடுப்பாரா? அல்லது தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களுக்கு மேல் காலஅவகாசம் உள்ளதால் பிறகு முடிவெடுப்பாரா? அவரது முடிவு என்னவாக இருக்கும்?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!