சைபர் ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, விஓசி பொறியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய தேசிய அளவிலான சைபர் ஹேக்கத்தான் போட்டி அண்ணா பல்கலைக்கழக தூத்துக்குடி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், இந்தியா முழுவதிலும் இருந்து 470 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுகளை சமர்ப்பித்தனர். இறுதி போட்டியில் 19 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவன் ரோஹித், மாணவி ஸ்ரீநிதி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
தடையற்ற நகர திட்டத்துக்கான ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் மேப்பிங் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆபத்தான போக்குவரத்து பகுதிகளை அடையாளம் காட்டிய புதுமையான தீர்வுக்காக இவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியை கல்லூரி நிர்வாக அறங்காவலர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பாராட்டினார்.