fbpx
Homeபிற செய்திகள்ஆளுநர் ரவி அழைப்பை ஏற்பார்களா துணைவேந்தர்கள்?

ஆளுநர் ரவி அழைப்பை ஏற்பார்களா துணைவேந்தர்கள்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசு தயார் செய்து கொடுக்கும் ஆளுநர் உரைகளையும் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் படிப்பதில்லை. தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.


இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி இனி துணை வேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க முடியும்.

மேலும், மசோதாக்களை ஒப்புதல் அளிக்கவும் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருந்தது. இந்த சூழலில் ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு ஊட்டியில் வரும் 25, 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார்.


ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையே ஆளுநர் மாளிகை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

அதாவது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா, துணைவேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.


சில நாட்களுக்கு முன்பு தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்தச் சூழலில் தான், ஆளுநர் தரப்பில் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு போட்டி மாநாடாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தங்கள் சட்ட மசோதாக்கள் உச்ச நீதிமன்ற சிறப்பு அதிகாரம் காரணமாக சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளன.

ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தராக (தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் நீங்கலாக) ஆளுநரே இருந்து வருவதாக ஆர்.என்.தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதனை மறுத்து விளக்கம் எதையும் தமிழ்நாடு அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


இந்த விவகாரம் விவாதப்பொருளாக பொதுவெளியில் மாறிவிடட சூழலில் ஆளுநர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்ற கேள்வி உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தளத்திற்கு இருபக்கமும் இடி என்பது போல இருதலைக் கொள்ளியாகத் தவிப்பது என்னவோ துணை வேந்தர்கள் மட்டுமல்ல, வேந்தர் யார் என்று உறுதியாகத் தெரியாமல் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களும்தான்!

படிக்க வேண்டும்

spot_img