வெற்றி மிக அருகில் தான் என்ற கட்டுரைத் தொடரின் இரண்டாவது கட்டுரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு எது வெற்றி என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று எழுதி இருந்தேன்.
பெங்களூரைச் சேர்ந்த அறிஞரும் முன்னாள் பைலட்டுமான திரு.சந்திர குமார் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்த கேள்வி இது தான்.
‘அவரவர் வெற்றியை அவரவரே தீர்மானிப்பது என்றால் திருடனுக்கும் கொலைகாரனுக்கும் லைசென்ஸ் கொடுத்தது போல் ஆகி விடாதா?’ என்று கேட்டவர் தொடர்ந்து‘வெற்றி என்பது அறத்தில் இருந்து பிறழாது இருக்க வேண்டும் என்று நான் நினைக் கிறேன்!’ என்றும் சொல்கிறார்.
உண்மை தான். அவருடைய கருத்தை மறுக்கவே முடியாது தான்.
இதற்கு என்ன விடை?
ஒரு லட்சியத்தை, வெற்றியின் பாதையைத் தீர்மானிக்கும் போது அது அறம் சார்ந்ததாக இருக்க வேண் டும் என்பதும் மிகவும் அவசியம்.
வெற்றிப் பாதை என்ற பெயரில் தவறான நோக்கத்தை, தவறான லட்சியத்தை நாம் முடிவு செய்யக் கூடாது என்பதும் மிகவும் முக்கியம்.
ஒரு பெரிய கிரிமினல் கூட தன் பாதையில் வெற்றியை அடைய உழைக்கிறான். ஆனால் அது நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவு கேடாக அமையும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
எனவே, நமக்கு தேவையான வெற்றிப் பாதையைத் தீர்மானிக்கும் போது எச்சரிக்கை மிகவும் அவசியம்.
கொஞ்சம் கண்ணைச் சுழற்றிப் பார்க்கும் போது நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
அரசியலில் இன்று கோடிக் கணக்கான பணம் பெறப்படுகிறது, கைமாறுகிறது என்பது எவ்வளவு கவலைக்குரிய விஷயம்.
ஆனால், இதுகுறித்து நாம் யோசிக்கிறோமா இல்லையே, ஏன்? நமக்குத் தொடர்பு இல்லாத விஷ யம் போல எண்ணிக்கொண்டு இருக்கி றோமே இது சரியா?
இது குறித்து நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?
இப்படிப் பல விஷயங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
நான் ஒரு நாவலில் எழுதி இருந்தேன். தன்னைக் குறித்து நம்பிக்கை இருக்கிற, தன் கடமையைச் செய்கிற ஒவ்வொரு இளைஞனும் ஒரு ஹீரோ தான் என்று.
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், ஒரு சினிமா நடிகரைப் பிடிக்கிறது என்பதற்காக அவர் கட்அவுட்டுக்கு சொந்தப் பணத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து பாலாபிஷேகம் செய்கிற இளைஞர்களைப் பற்றி நாம் கண்டு கொள்கிறோமா? பெற்றோர்கள் இது குறித்து யோசிக்க வேண்டாமா?
தங்கள் பிள்ளைகள் எங்கே போகி றார்கள், என்ன செய்கிறார்கள் என்பது குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கத்தானே வேண்டும்?
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு இளைஞன் சொல்கிறான், தனக்குப் பிடித்த கதாநாயகன் படம் ரிலீஸின் போது ஒவ்வொரு முறையும் கட்அவுட் வைக்க ஒன்றரை லட்சம் செலவு செய்கிறேன் என்று.
எவ்வளவு தூரம் கவலைப் பட வேண்டிய விஷயம் இது?
கிரிக்கெட், சினிமா இரண்டும் இன்றைய இளைஞர்களின் எல்லா பலத்தையும் கட்டிப் போட்டி ருக்கிறது.
ரசனை தேவைதான். ஆனால், வெறித்தனமான ரசனையால் அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு செலவு? இது தேவை தானா என்பதில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை இல்லையா?
வீட்டிலே இருக்கும் வளரிளம் பிள் ளைகள் அதாவது டீன் ஏஜர்ஸ் குறித்துக் கண்டிப்பாகப் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அடிக்கடி தனிமை நாடுகிறார்களா?
நேரம், காலம் தெரியாமல் வெளியே சென்று வருகிறார்களா?
போர்வைக்குள் நுழைந்து கொண்டு நள்ளிரவில் மேசேஜ்கள் அனுப்புகின்றார்களா,
அடிக்கடி மற்றவர்களிடம் கோபப் படுகிறார்களா? இதெல்லாம் யோசிக்க வேண்டிய, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம்.
பெரும்பாலான நேரங்களில் இவர் நம் குழந்தை, இவர் நம் மகன், இவர் நம் கணவர், இவள் என் மனைவி என்று நெருங்கிய உறவு ஒன்றை நாம் முழுமையாக நம்புகிறோம்.
அப்படிப் பெரிதும் நம்பும் போது, ஒரு உறவு துரோகம் செய்யும் போது நாம் எப்படி மனம் உடைந்து போகிறோம்? அதனால், தான் சொல்கிறேன் எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கைப் பார்வை தேவை.
நம் இளைஞரை, யுவதியை நாம் முழுமையாக கவனிக்காத போது நமக்கே தெரியாமல் நம் வீட்டிலேயே ஒரு குற்றவாளி உருவாகக் கூடிய நிலைமை கூட ஏற்படலாம்.
பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அப்படி ஒரு முகம் இருக்கிறது என்பது அவர்களது குடும்பத்திற்கே தெரியாத நிலைமை தான் இருக்கிறது.
அன்பு காட்டும் போது கூட நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ? என்று தோன்றுகிறது.
அன்பு காட்டுவதன் காரண மாக நம் குழந்தைகளுக்குக் கேட்காமலேயே நிறைய வாரித் தருகிறோம். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் என்றால் குழந்தைகளுக்கு இன்னும் கொண்டாட்டம் தான்.
பெற்றோர்களுக்கு மனதின் ஓரத்தில் அவர்களுக்கு முழுமையாக நேரம் கொடுக்க முடியவில்லையே என்றிருக்கும் குற்ற உணர்ச்சியைப் பெரிதும் பயன்படுத்திக் கொள் கிறார்கள். அல்லது பெற்றோரே நிறைய வாரி இறைக்கிறார்கள்.
இந்த நிலையில் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும் அல்லவா?
இன்றைய இளைஞர்களும் இளம் பெண்களும் இயல்பாகப் பழகுகிறோம் என்ற பெயரில் நெருங்கிப் பழகுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. இயல்பாகப் பழகுகிறோம் என்ற பெயரில் எல்லா எல்லைகளையும் மீறுகிறார்கள். பிறகு, பிரேக்அப் என்ற பெயரில் பிரிந்து விடுகிறார்கள்.
இது இன்றைய நிலைமையில் இளம் தலைமுறையினர் இடத்தில் உண்மையாகவே நடக்கிறதோ என்று தோன்றுகிறது.
கட்டுப்பாடுகள் உடைத்து எறியப் படுகின்றன.
பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில் பெண்களும், ஆண்களும் எல்லை மீறுகிறார்களா? என்ற கவலையும் இருக்கிறது. இதிலும் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும் அல்லவா.
உலக அளவில் இந்தியாவின் குடும்பக் கலாச்சாரம் பெரிதும் மதிக்கப்படுகிறது. அது மெல்லிய கோடுகளால் சிதிலப்பட்டு போகிறதோ என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. இது குறித்து எச்சரிக்கை வேண்டாமா?
மேல் மட்டம், கீழ் மட்டம் என்று இல்லாமல் எல்லா மட்டங்களிலும் இது காணப்படுகிறது.
பிரகலாதன் கதை கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?
அவன் தந்தை ஒரு அசுரன்.அவன் தவம் இருந்து வரம் வேண்டுகிறான். அவன் முதலில் இறவாமை வேண்டும் என்று கேட்கிறான். பிரம்மா யாருக்குமே இறவாமை வரம் கொடுக்க முடியாது. பிறந்தவர் எல்லாம் இறந்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி விடுகிறார்.
அவன் ரொம்பவும் புத்திசாலித் தனமாக எச்சரிக்கையாக வரம் கேட்கிறான்.
எப்படி?‘வீட்டுக்கு வெளியிலேயோ, உள்ளேயோ, விலங்குகளாலேயோ, மனிதர்களாலேயோ, ஆயுதத் தாலேயோ, பகலிலோ, இரவிலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது!’ என்று வரம் கேட்கிறான்.
ரொம்ப எச்சரிக்கையாக வரம் கேட்பது போல நினைத்துக் கொண் டான். ஆனால், இறை சக்தி அதை விட எச்சரிக்கையாக அவனுக்கு முடிவு கட்டுகிறது.
எப்படி? மகாவிஷ்ணு நரசிம்மராக வந்தார். அதாவது, சிங்க முகம் மனித உடல், அதாவது மனிதனும் அல்லாமல் விலங்கும் அல்லாமல் ஒரு உருவம், வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல் வீட்டின் வாயிற் படியில் அமர்ந்து அந்த சம்ஹாரத்தை நிகழ்த்துகிறார் விஷ்ணு.
சரியாக மாலை நேரம், அதாவது, பகலும் அல்லாமல் இரவும் அல்லா மல் ஒரு நேரத்தில் அவனைக் கொல்கிறார். ஆயுதம் இல்லாமல் தன்னுடைய நகத்தால் அவனுடைய குடலைக் கிழித்து அவனைக் கொல் கிறார் விஷ்ணு.
அசுரன் எவ்வளவு எச்சரிக்கையாக வரம் வாங்கிய போதும் இறை சக்தி எச்சரிக்கையாக எப்படி இதை கையாண்டது என்பதை நாம் கவ னிக்க வேண்டும்.
நாம் சற்று எச்சரிக்கையாக இல்லா விட்டால் நம் வீட்டிலேயே போதைக்கு அடிமையான ஒரு குழந் தையை நம்மால் கண்டு கொள்ள முடியாமலே போய் விடும்.
கொஞ்சம் எச்சரிக்கையாக நாம் ஓட்டுப் போட வில்லை என்றால் சற்றும் பொருத்தம் இல்லாத, தகுதி இல்லாதவர்கள் நாட்டில் முக்கிய பதவிகளைப் பிடித்து விடுவார்கள்.
நாம் கவனம் தவறினால், பள்ளி களுக்கு உள்ளேயே போதை மருந்து நுழைந்து விடுகிறது.
சினிமா, கிரிக்கெட் போன்ற ஆக்கிரமிப்புகள் மட்டும் இல்லாமல் காதல் என்ற பெயரிலும் நிறையக் கூத்துகள் நடைபெறுகின்றன.
ஏதோ காதல் ஒன்று தான் வாழ்க்கையில் முக்கியம் என்பது போன்ற ஒரு தோற்றம் விளைவிக்கப்ப டுகிறது.
பொழுதுபோக்கு அம்சங்கள் நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
நாம் ஆழ்ந்து யோசித்தால் நாம் கேட்க வேண்டிய கேள்வியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்கிறோமோ என்று தோன்றுகிறது.
மிகப்பெரிய விஷயங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சமுதாயத்தில் பெரும் பகுதி ‘நரி இடமாப் போனால் என்ன, வலமாப் போனால் என்ன? நம்மளைக் கடிக்காமப் போனாப் போதும்!’ என்கிற நிலையில் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
இப்படிச் சுரணையற்ற தன்மை நாட்டிற்கு நல்லது அல்ல என்ற எச்சரிக்கையும் கொஞ்சம் தேவை தான்.
பொருட்களை வாங்கும் போது கூட நமக்கு எச்சரிக்கை வெகுவாக தேவைப்படுகிறது.
எனக்கே பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு அனுபவம் நேர்ந்தது. ஒரு வேலையாக வெளியூருக்குப் போய்விட்டு வந்து பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கே ஒரு வண்டிக்காரர் பழங்களை வைத்து விற்றுக் கொண்டு இருந்தார். நான் பழம் வாங்கலாம் என்று நான்கு ஆப்பிள்களைப் பொறுக்கி எடுத்து பொட்டலம் கட்டுவதற்காக அவரிடம் கொடுத்தேன்.
என் கண் முன்னாலேயே தான் அந்த விற்பனையாளர் பொட்டலம் கட்டினார். ஆனால், வீட்டிற்கு வந்து பிரித்துப் பார்த்தபோது, நான்கு பழங்களுமே அழுகிய பழங்களாக இருந்தது.
என் கண் முன்னாலேயே தான் பொட்டலங்கள் கட்டினார் விற்பனையாளர், ஆனால், எப்படி மாற்றினார் என்றே தெரியவில்லை.
இன்று வரை அது எனக்கு ஒரு புதிராகவே உள¢ளது.
அதனால் தான் சொல்கிறேன், பொருட்களை வாங்கும் போதும் விற்கும் போதும் குடும்பங்களில், வெளியில், குழந்தைகளிடத்தில், அரசியலில் என்று வாழ்க்கையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நமக்குக் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.
நம்மைச் சுற்றி இருக்கும் நம்மை வாழ்விக்கச் செய்யும் சக்திகள் எவை, வீழ்த்த வந்த சக்திகள் எவை என்ற தெளிவான பார்வை நமக்குத் தேவை.
வெற்றியை நோக்கி நடக்கும் போது, எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை நண்பர்களே….
(எழுத்தரசி ஜெய்சக்தி)