டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் கடந்த செப். 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த 5 மாதங்களாக டெல்லி முதல்வர் பதவியில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்து வெளிவந்த உடனே தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவிக்கு திரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போதைய கல்வி அமைச்சர் அதிஷி மர்லினா டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின், அடுத்த கட்ட தலைவர்கள் வரிசையில் அதிஷியும் இருந்தார் என்பதால் இந்த தேர்வில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அதிஷி (43), 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.
சத்யேந்திர ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சட்டச்சிக்கல்கள் காரணமாக தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த பின்னர், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அப்போது இவருக்கு கல்வி, பொதுப்பணி துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலா துறைக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அதிஷி டெல்லியின் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கல்வி ரீதியான மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றியவர் எனலாம். பள்ளிகளில் வசதிகளை அதிகமாக்கியது, கற்பித்தல் நடைமுறை தரமாக உயர்த்தியது ஆகியவற்றிலும் இவர் பங்காற்றினார். துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருந்தபோது, அவரின் ஆலோசகராக பணியாற்றிய நேரத்தில், ‘தொழில் முனைவோர் மனப்பான்மைக்கான பாடத்திட்டம்‘ மற்றும் ‘மகிழ்ச்சியான பாடத்திட்டம்‘ போன்ற பல முயற்சிகளை முன்னெடுத்தார்.
கல்வித்துறையில் இவரின் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, சுற்றுச்சூழல் பிரச்னைகளிலும் இவர் அதிக கவனம் செலுத்துபவர். டெல்லியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளை அதிஷி மேற்கொண்டிருக்கிறார்.
வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லிக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். எனவே, அதுவரை அதிஷி மர்லினாவே முதலமைச்சர் பதவியில் நீடிப்பார். இவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை சென்ற சமயத்தில் ஆட்சியையும், கட்சியையும் பலம் குறையாமல் பார்த்துக்கொண்ட முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். முதல்வர் பதவிக்கு சரியான, பொருத்தமானவர் அவர் என்றே அனைவராலும் பாராட்டப்படுகிறார். அவரது திறமைக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது. முதல்வராக அவர் வரும் சனிக்கிழமை பொறுப்பேற்கிறார். அதிஷி மர்லினாவுக்கு வாழ்த்துகள்!