fbpx
Homeதலையங்கம்விமானங்களுக்கு குண்டு மிரட்டல் புரளி: தீர்வு?

விமானங்களுக்கு குண்டு மிரட்டல் புரளி: தீர்வு?

இந்தியாவில் விமான பயணம் கடந்த சில வாரங்களாகவே அச்சத்துக்கு உரியதாக மாறிவருகிறது. விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் கடத்தப்போவதாகவும் தொடர்ச்சியாக வரும் மிரட்டல்களே இதற்கு காரணம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு 100 மிரட்டல்கள் வந்துள்ளன.


சோதனைக்கு பின் இவை புரளி என தெரியவந்தாலும் மிரட்டல்களை அவ்வளவு எளிதில் நிராகரிக்கவும் இயலாத நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். விமான நிறுவனங்களும் கடுமையான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. உயிர் பீதி ஒருபுறம் இருக்க, செல்ல வேண்டிய இடத்திற்கு எப்போது சென்று சேர்வோம் என்ற கவலையும் பயணிகளை ஆட்கொள்கிறது.

விமான நிறுவனங்களை பொறுத்தவரை மாற்றுப்பாதையில் பயணிப்பதற்கான செலவுகள், திட்டமிடப்படாத தரை இறக்கச் செலவுகள், எரிபொருளை வெளியேற்றுவது, பயணிகளுக்கு தங்குமிட வசதிகள் செய்து தருவது, சோதனைகள் செய்வதற்கான செலவு என ஒவ்வொரு மிரட்டலுக்கும் 4 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டிய நெருக்கடி உள்ளது.


பெரும்பாலான மிரட்டல்கள் சமூக தளங்களில் பதிவிடப்படுகின்றன. விபிஎன் தொழில்நுட்பத்தில் எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கி மிரட்டல்கள் விடப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளதையடுத்து விமான போக்குவரத்து ஆணையம் உடனடியாக தடுப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளது.

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ஓர் பின்னடைவை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் தான் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் கடும் தண்டனை விதிக்கும் வகையில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். மத்திய அரசும் அதுபற்றி தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரை வெடிகுண்டு மிரட்டல் விடுப்போருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம். அதற்கேற்ப சட்டங்களைக் கடுமையாக்க வேண்டிய அவசியத்தைத்தான் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் உணர்த்துகிறது. எனவே புதிய சட்டம் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டு விரைவாக அமலுக்கு வரவேண்டும்.
இந்திய வான்வெளி மிகவும் பாதுகாப்பானது என்பதில் சந்தேகமில்லை. அதை மீண்டும் உறுதி செய்வோம்!

படிக்க வேண்டும்

spot_img