கடலூரில் அண்ணா மாரத்தான் போட்டியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி நேற்று கடலூர் சாவடியில் நடந்தது. போட்டியை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்க ளுக்கு 8 கி.மீ.தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும்,25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ.தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள்,பெண்கள் அனை வரும் உற்சாகத்துடன் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடிவந்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
அதாவது, அனைத்து பிரிவுகளுக்கும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 வரை பரிசுத்தொகை தலா ரூ.1000 வீதம் வழங்கப்பட்டது. முதல் 10 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பரிசுத்தொகை, ஆர்.டி.ஜி. எஸ். மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.