fbpx
Homeபிற செய்திகள்200 டன் எடை கொண்ட அண்ணாமலையார் தேர் 8ந் தேதி வெள்ளோட்டம் - ஆட்சியர் ஆய்வு

200 டன் எடை கொண்ட அண்ணாமலையார் தேர் 8ந் தேதி வெள்ளோட்டம் – ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் மராமத்து பணி நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் மராமத்துப் பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 59 அடி உயரம், சுமார் 200 டன் எடை அளவு கொண்டிருக்கிறது. 470 சிற்பங்கள் இத்தேரில் இடம் பெற்றிருக்கின்றது.

203 சிற்பங்கள் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் தேரோட்டம் நிகழ்வு நடைபெற ஏதுவாக சுவாமிதேரில் மராமத்து பணிகள் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

தேரில் உள்ள சிற்பங்கள் ஈட்டி மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. நிலைகள் வேங்கை மரத்தினால் செய்யப்பட்டிருக்கின்றது. தேவாசனம், நராசனம். சிம்மாசனம் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும், தேவாசனம், சிம்மாசனம் மற்றும் இறையாசனம் இவற்றில் வரும் பழுதடைந்த பலகைகள் மாற்றப்பட்டுள்ளது. நான்கு கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தேரில் கண்டத்தில் வரும் பழுதடைந்த குத்துக்கால்கள் நீக்கப்பட்டு புதியதாக குத்தக்கால்கள் மற்றும் ரீப்பர்கள் மாற்றப்பட்டுள்ளது. தேரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மா மற்றும் துவாரபாலகர் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சுவாமி தேரில் இல்லாத இடங்களில் சிம்மயாழி -37, கொடியாழி -13,தேர் சிற்ப்பங்கள் 153 என மொத்தம் 203 தேர் சிற்பங்கள் மாற்றப்பட்டு, பஞ்சவர்ணம் பூச்சு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுவாமி திருத்தேர் வெள்ளோட்டம் எதிர்வரும் 08.11.2024-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திருத்தேர் விழா விமர்சியாக நடைபெற உள்ளது.

அது மட்டும் இன்றி இத்தேரில் இதுவரை இல்லாத அளவில் அனைத்து சிற்பங்களும் தெளிவாக தெரியும் வகையில் பொலிவான வண்ணங்கள் மற்றும் வார்னிஷ்கள் பூசப்பட்டு வருகிறது. திருக்கோயில் திருத்தேர் பணி பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு வருவதால் புதுப்பிக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்படி நிகழ்விற்கான திருத்தேர் உறுதித்தன்மை சான்று (Stability Certificate) பொதுப்பணித்துறையிடமும் மற்றும் சாலையின் உறுதித்தன்மை குறித்தான சான்று (Road Stability Certificate) நெடுஞ்சாலைத்துறையிடம் கோரப்பட்டுள்ளது.

எனவே, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருதேரானது அனைத்து நிலைகளிலும் புதுப்பிக்கப்பட்டு புதிய தேராக பொலிவுடன் தேரோட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img