fbpx
Homeபிற செய்திகள்கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடி நினைவு நாள் ராணுவ அதிகாரிகள்...

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடி நினைவு நாள் ராணுவ அதிகாரிகள் வீர வணக்கம்

கோவை பெரியநாயக்கன் பாளையத்திற்கு அருகே நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் கண்ணாளன் கென்னடியின் 32ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பு மரியாதை செலுத்தினர். நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் வெங்கிட பெருமாள்.

இவரது மகன் கண்ணாளன் கென்னடி. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1993-ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சம்சாபாரி என்ற இடத்தில் உள்ள பனிப்பிரதேச மலைப்பகுதியில் 8 தீவிரவாதிகள் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது அவர்களை எதிர்த்து நின்று போரிட்டு 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி வீரமரணம் அடைந்தார். தனிமனிதனாக இருந்து தீவிரவாதிகளை தாக்கி கொன்று வீரமரணம் அடைந்ததை போற்றும் விதமாக இந்திய அரசு 1994ம் ஆண்டு இவருக்கு இராணுவத்தின் 2வது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதை அப்போதைய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா வழங்கி கவுரவித்தார். கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில் இராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் இவரது நினைவிடத்தில் நடைபெற்ற 32ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ பிரிவின் சுபேதார் மேஜர் முனிசந்திரன், சுபேதார் கெப்புசாமி, சுபேதார் சாந்தகுமார், சுபேதார் சேசுதாஸ், சுபேதார் சுனில் தேசாய் ஆகியோர் தலைமையிலான 20 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் கென்னடியின் படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கென்னடியின் சகோதரர்கள் செல்வநம்பி, அண்ணாதுரை, குப்புஜெயம் முன்னாள் ராணுவ வீரர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், கிராமப் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img