பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக, இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏடிஎம் இலவச வரம்புகள் முடிந்த பிறகு ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தணைகளுக்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 5 முறை ஏடிஎம்-ல் இலவசமாக பணம் எடுக்கலாம்.
5முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்கு, ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை மே 1ஆம் தேதி முதல் 23 ரூபாயாக அதிகரிக்க, ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வங்கிக்கே செல்லாமல் எந்த நேரமும் ஏடிஎம் வழியாக பணம் எடுக்கும் நடைமுறை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.
பணப் பரிமாற்றத்தில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அபார வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த 2013-ல் 222 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிமாற்றம், 2024-ல் 20,784 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் 2758 லட்சம் கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் கூகுள்பே, போன்பே போன்ற யுபிஐ மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றத்தின் பங்கு மிக அதிகம். கடந்த 2019-ல் 34 சதவீதமாக இருந்த யுபிஐ பணப்பரிமாற்றம் 2024-ல் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
யுபிஐ வசதி மூலம் பணப் பரிமாற்றம் நடைபெறுவது இந்தியாவில் 100 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
இந்த அளவுக்கு வளர்ச்சி கண்டு வரும் நிலையில், கட்டணம் என்ற பெயரில் பொதுமக்கள் மீது மேலும் சுமையை அதிகரிக்கும்போது, அதனைத் தவிர்க்கும் முயற்சியாக பொதுமக்கள் மீண்டும் பழைய முறைக்கு திரும்பி வங்கிகளுக்கு நேரில் போய் கியூவில் உட்கார்ந்தால் அது எவ்வளவு பின்னடைவைத் தரும்? இந்த கோணத்தில் தான் இந்த கட்டண உயர்வு பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் வங்கிகள் உள்ளன. அவை பெரும் லாபத்திற்காக உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் அல்ல. தற்போது அனைத்து வங்கிகளும் குறைந்தபட்ச இருப்புக்கான அபராதம் உள்ளிட்ட பல கட்டணங்களை வாடிக்கையாளரின் அனுமதியின்றி கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன.
மக்களிடம் வசூலிக்கும் கட்டணம், அபராதம் ஆகியவை கோடிக்கணக்கில் வங்கிகளுக்கு கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், ஏடிஎம் சேவைக்காக வங்கிகள் செய்யும் செலவினை கணக்குப்பார்த்து வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தக்கூடாது.
ஏடிஎம் செலவுகளை தனது பிற வருமானத்தில் இருந்து சமாளிக்க வேண்டுமே தவிர, மக்கள் தலையில் நேரடியாக சுமத்துவதை யாரும் மனதார ஏற்க மாட்டார்கள்!