தமிழக அரசால் தொடங்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், துணிப்பைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய தமிழ்நடைமுறையை மீண்டும் உயிர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒருமுதன்மை முயற்சியாகும். இந்த பிரச்சாரம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை குறைப்பதை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி தீவிரமான பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளையும் வலியுறுத்துகிறது.
இதனடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியமும் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் நெகிழிப் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் நெகிழி சேகரிப்பு முகாம், தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்த வாரம் முழுவதும் சேகரிக்கப்பட்ட சுமார் 2 டன் நெகிழிகழிவுகள், மறுசுழற்சி செய்பவர்களுக்கும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும் அனுப்பப்படவுள்ளது.
தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற நெகிழிப் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கலைச்செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் நெகிழி தவிர்த்தல் சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான சாத்தனூர் அணையில் நெகிழிகழிவுகள் சேகரித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அதில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சாத்தனூர் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 200 கிலோ நெகிழிக் கழிவுகளை சேகரித்தனர். மேலும் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகளானது முறையே பிரிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள், பசுமை உறுப்பினர், தண்டராம்பட்டு பஞ்சாயத்து ஒன்றியத்துடன் இணைந்து பங்கேற்பாளர்களைத் திரட்டுவதிலும், பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், முயற்சியின் பயனை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தனர்.