லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கின. அப்போது முதலே “இந்தியா” என்ற பெயரை மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர். பிரதமர் மோடி, “இந்தியா” என்ற பெயரை கிழக்கிந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்துக்கான செயல் திட்டம் என்ன என்பது தெளிவாக விளக்கப்படவில்லை.
அதேநேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஒரே நாடு ,ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பரபரப்புகளுக்கு இடையே ஜி 20 மாநாட்டை முன்னிட்டு உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் பாரத ஜனாதிபதி என இடம் பெற்றிருந்தது புதிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதை “பாரதம்“ என மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் கொண்டுவரப்படலாம் எனவும் தகவல்கள் பரவின.
ஒரே நாடு ஒரே தேர்தல் போல, இந்தியா- பாரதம் தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெறுகின்றன.
தற்போது, பாரத் அல்லது இந்தியா விவகாரத்தில் சற்று அமைதியாக இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாரத் அல்லது இந்தியா குறித்த சர்ச்சையை “ஆறப்போட்டு” பார்க்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என கூறப்படுகிறது. அதனாலேயே மத்திய அமைச்சர்களை அமைதி காக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா என்ற பெயரை தமிழகத்தில் பாரதம் என அழைக்கிறோம். இது தவறு இல்லை. ஆனால் இந்தியாவின் பெயரை பாரதம் என அதிகாரப்பூர்வமாக மாற்றப் போகிறார்களா? அல்லது நடைமுறைக்காக பயன்படுத்தப் போகிறார்களா? என்பது தெரியவில்லை.
பாரத் என அதிகாரப்பூர்வமாக மாற்றினால் நடைமுறையில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்; அவை அனைத்தும் புதியதாக பாரத் என்ற பெயருடன் அச்சிட வேண்டும்.
பாஸ்போர்ட்டுகள் அனைத்திலும் பாரத் என மாற்ற வேண்டும்.
இதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்படுகிறது. இப்படி நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன.
ஜி20 மாநாட்டிற்கான குடியரசுத் தலைவரின் விருந்து அழைப்பிதழில் பாரத் என அச்சிட்டு பிரச்னையைத் துவக்கி வைத்ததே ஒன்றிய பாஜக அரசு தான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் பாஜக அரசின் கடமையே.
இடியாப்பச் சிக்கலில் இருந்து எப்படி விடுபடப்போகிறார், பிரதமர் மோடி?