fbpx
Homeதலையங்கம்அண்ணாமலைக்கு டெல்லி ‘கடிவாளம்’!

அண்ணாமலைக்கு டெல்லி ‘கடிவாளம்’!

அதிமுக – பாஜக இடையிலான மோதல் மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. டெல்லி பாஜகவோடு அதிமுக தலைவர்கள் நட்பாகவே உள்ளனர். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் அதிமுகவிற்கு அவ்வளவு சுமுகமான உறவு இல்லை.

முக்கியமாக அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி இடையே நட்பான உறவு இல்லவே இல்லை. இந்த நிலையில்தான் தனது நடைபயண யாத்திரைக்கு இடையே பேட்டி அளித்த அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை.

என்டிஏ கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன். கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில்தான் நான் அரசியல் செய்வேன் என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில்தான் அண்ணாமலை தனது நடைப்பயணத்தில் திடீரென ஓய்வு எடுத்துள்ளார். நேற்று மதுரையில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் நடைபயணம் செல்லவில்லை.

அண்ணாமலை டெல்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அண்ணாமலை சென்னையில் தான் இருந்தார்.

அண்ணாமலை பயணத்திற்கு இடையே ஏன் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அந்த அளவிற்கு அவர் நடக்கவே இல்லையே. அந்த அளவிற்கு அவர் நடக்காத போது ஏன் ஓய்வு? 120 -150 கிமீ அவர் நடந்தாரா? இல்லையே? அவர் மொத்தமாக நடந்ததே 30 – 40 கிலோ மீட்டர் தூரம்தான். அதற்கு மேல் அவர் நடந்திருக்க முடியாது.

அவர் கேரவனில்தான் செல்கிறார். ஒருநாளுக்கு அதிகபட்சம் 3-&4 கிலோ மீட்டர்தான் நடக்கிறார். டவுன் எல்லை வரை பேருந்தில் வந்துவிட்டு அதன்பின் உள்ளே நடந்து வருகிறார். மீண்டும் கேரவனில் செல்கிறார். அவர் செல்வது யாத்திரை, நடைபயணம் அல்ல என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அண்ணாமலையின் போக்குக்கு பாஜக தலைமை குட்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. நீங்கள் அனாவசியமாக அதிமுகவைச் சீண்டி சர்ச்சையை உண்டாக்க வேண்டாம், கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று டெல்லி அவரிடம் கூறி உள்ளதாம்.

ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை மதுரையில் பேசியது சர்ச்சை ஆகி உள்ளது. இதை பற்றி நட்டாவிடம் டெல்லியில் அதிமுக புகார் சொல்லி உள்ளது. தேவையில்லாமல் அண்ணாமலை பிரச்சனை செய்கிறார் என்று புகார் கூறி உள்ளனர்.

அதனால் தான் அண்ணாமலையை பாஜக தலைமை கண்டித்துள்ளது. இதுவே அவர் பாதயாத்திரையை இடைநிறுத்தி ஓய்வு எடுக்கப் போய் விட்டதற்குக் காரணம் என எதிரணியினர் விமர்சித்து வருகின்றனர்.

அண்ணாமலையின் யாத்திரை…பாதயாத்திரை தொடரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழகத்தில் பாஜக – அதிமுக உறவு மலருமான என்பதே கேள்வி. டெல்லியில் உறவு… தமிழகத்தில் உரசல் என்றால் கூட்டணி தர்மம் என்பது கேலிக்கூத்தாகி விடும். அது தான் நடந்து கொண்டும் இருக்கிறது.

பாஜக மேலிடம் கடிவாளம் போட்டது உண்மையா? அது அண்ணாமலையைக் கட்டுப்படுத்துமா?
பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img