நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி பாமக 10 தொகுதிகளையும் தேமுதிக 7 தொகுதிகளையும் பெற ஒப்புக் கொண்டு விட்ட நிலையில் இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம். இது அதிமுக கூட்டணிக்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
எப்படியாவது இரண்டாம் இடம் வந்துவிட வேண்டும் என்பதில்தான் அதிமுக உறுதியாக உள்ளது. இரண்டாம் இடத்தை பாஜகவிற்கு விட்டுக்கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே பாமக பின்னால் எடப்பாடி பழனிசாமி அலைந்து கொண்டு இருக்கிறார்.
கட்சியில் தன்னைத் தலைவராக நிலைநிறுத்திக் கொள்தற்காக எப்படியாவது ஸ்டாலினுக்கு எதிராக பெரிய அணியை உருவாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். ஸ்டாலின்தான் தனக்கு எதிரி என்று காட்ட நினைக்கிறார். இது தான் பாமகவை வைத்து அதிமுக போடும் அரசியல் கணக்கு.
பல தேர்தல்களில் பாமக வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதன் மூலம் இரண்டாம் இடத்தை நிர்ணயிக்கும் கட்சியாக மாறி இருக்கிறது.
ஆக, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு அதிர்ச்சியைத் தருமா? பேரதிர்ச்சியைத் தருமா? ஆறுதல் பரிசையாவது தருமா?
முதலில் கூட்டணிகள் இறுதியாகட்டும் – தேர்தல் அறிவிப்பு வெளியாகட்டும்.
பொறுத்திருப்போம்!