fbpx
Homeபிற செய்திகள்நீதிபதி வீட்டில் பண மூட்டை: சரியான திசையில் விசாரணை!

நீதிபதி வீட்டில் பண மூட்டை: சரியான திசையில் விசாரணை!

டெல்லி லுத்தியன்ஸ் பகுதியில் உள்ள டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 20ம் தேதி நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டினுள் பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஒரு நீதிபதியின் அதிகாரப்பூர்வ வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக பணம் மீட்கப்பட்ட விவகாரம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாருக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது. மேலும், 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு வந்த உடனே உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதோடு வழக்குகள் எதையும் தர வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் தனது அறிக்கையையும், நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது தரப்பு விளக்கத்தையும் நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர். இவை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய நீதிபதி யஷ்வந்த் வர்மா தன்மீதான குற்றச்சாட்டை பகிரங்கமாக மறுத்துள்ளார். சதி நடந்திருப்பதாகவும், தீவிபத்து நடந்த அறையில் ரூபாய் நோட்டுகள் எதுவும் இல்லை என்றும், எரிந்த ரூபாய் நோட்டுகள் அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் மறுத்துள்ளார். இது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.

ஆனால் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட வீடியோவில் தீயணைப்பு வீரர் சீருடையில் ஒருவர் எரிந்த பொருட்களை விலக்குவது போலவும், அருகில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக பணக்குவியல் இருப்பது போலவும் காட்சிகள் பதிவாகி உள்ளன. எனவே தீயணைப்பு துறை இந்த விவகாரத்தில் எதற்காக முரண்பாடான தகவல் வெளியிட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஊழல் மலிந்துவிட்ட நிலையில், பாதிக்கப்படும் மக்களின் ஒரே புகலிடமாக, வடிகாலாக நீதித்துறையே இருந்து வருகிறது. ஆனால், மக்கள் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றிவரும் நீதித்துறையின் மீதே களங்கம் ஏற்படும் வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அமைந்து விடுகிறது.

அதுமட்டுமின்றி, உள்கட்ட விசாரணை நடத்தி, அதுதொடர்பான விவரங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உச்சநீதிமன்ற இணைய தளத்திலேயே ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் உள்ள காணொலி மற்றும் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிட்டு தங்களது வெளிப் படைத்தன்மையை பறைசாற்றியிருப்பது பாராட்டுக்குரியது.

ஒரு சாமான்ய நபரின் வீட்டில் இதுபோன்ற பணம் மீட்கப்பட்டிருந்தால், சட்டம் எப்படி பாய்ந்திருக்கும்? அவரை சட்டம் எப்படி கையாளும்? அதே நடைமுறையில் நீதிபதியையும் சட்டம் கையாண்டால் தான் மக்களுக்கு நீதித்துறையின்மீது நம்பிக்கை ஏற்படும்.

விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. நீதிமன்றங்களின் மாண்பு காக்கப்படும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. உச்சநீதிமன்றத்தில் நடவடிக்கைகள் அதைத் தான் வெளிப்படுத்துகிறது!

படிக்க வேண்டும்

spot_img