ஒன்றிய அரசு மாநில உரிமைகளைத் திட்டமிட்டு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேபோன்ற உரிமை பறிப்பு வேலை டெல்லியில் நடைபெற்ற 50வது ஜி.எஸ்.டி. கலந்தாய்வுக் கூட்டத்தில் அரங்கேறி உள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘வணிகர்கள் மீதான குற்ற வழக்குகள் மாநில அரசு சட்டங்கள்கீழ் பதிவு செய்து விசாரணைக்கு வருவதை இனி ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை விசாரணை யின்கீழ் வரும் பண மோசடி சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில், இது மாற்றப்படுகிறது’’ என்று அறிவித்தார்.
இதனைத் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அக்கூட்டத்திலேயே எதிர்த்து, ‘‘இது ஏற்கத்தக்கதல்ல; தமிழ்நாட்டு சிறு வணிகர்கள் மிகவும் தொல்லைக்குட்படுத்தப்பட்டு அவதிக்குள்ளாகும் ஆபத்து உள்ளது’’ என்பதைக் கூறி, கண்டித்து ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார்.
சரக்குகள் மற்றும் சேவைகள் இணையத்தை, பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 – இன் கீழ் சேர்ப்பது வணிகர்களின் நலனுக்கு எதிராகவும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழ் சட்டமீறல்களை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றும் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானதாகவும் உள்ளதால், நாடெங்கும் உள்ள வணிகர்களுக்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இதை எதிர்க்கிறது என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி, முன்பு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அன்றைய ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி.யைக் கொண்டு வந்தது. அப்போது கடுமையாக எதிர்த்து, ‘‘ஜிஎஸ்டியை அனுமதிக்கவே மாட்டேன்’’ என்று அவர் முழங்கினார்.
இப்போது மாநில உரிமைகளை இப்படியா பறிப்பது? என்ன நியாயம்?
இது வன்மையான கண்டனத்திற்குரியது!