மத்திய, மாநில அரசுகள் இடையே உள்ள ஒருங்கிணைந்த முயற்சிகளால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த கூட்டு முயற்சியால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக 2019 முதல் தற்போது வரை 290 முகாம்கள் அமைக்கப்பட்டன.
இதில் 58 முகாம்கள் கடந்த 2024-ல் அமைக்கப்பட்டன. நடப்பாண்டில் மேலும் 88 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.
அதேநேரத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையும் மாவோயிஸ்ட்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டம் (எஸ்ஐஎஸ்), சிறப்பு மத்திய அரசு உதவித்திட்டம் (எஸ்சிஏ) என்ற பெயரிலான 2 சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
2024-ம் ஆண்டில் மட்டும் 290 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 2025 புத்தாண்டு பிறந்து முதல் 3 வாரங்களுக்குள் 48 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப்படையினர், துணை ராணுவத்தினர், போலீஸார் இணைந்து நடத்தும் தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் 3 வாரங்களில் தினந்தோறும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 14 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் கும்பலின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் என்பவரின் தலைக்கு அரசு ரூ.1 கோடி விலை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2026ம் ஆண்டிற்குகள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சபதம் எடுத்துள்ளார். அவரது உத்தரவை தொடர்ந்து மாவோயிஸ்ட்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாவோயிஸ்ட் தீவிரவாதி கூட இல்லாத இந்தியா உருவாகட்டும். வேட்டை தொடரட்டும். அமித் ஷாவின் சபதம், அவர் குறித்த காலத்திற்கு முன்னதாகவே, விரைவாகவே நிறைவேறட்டும்!