fbpx
Homeபிற செய்திகள்‘பார்க்கிங்’ பிரச்சனை தீர்க்க வரவேற்கத்தக்க அறிவிப்பு!

‘பார்க்கிங்’ பிரச்சனை தீர்க்க வரவேற்கத்தக்க அறிவிப்பு!

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், புதிய கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன பதிவுக்கு பார்க்கிங் சான்றிதழ் அவசியம் என்ற பார்க்கிங் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறை, புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் முன், தனிநபர்கள் பார்க்கிங் செய்வதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இது வாகனம் பார்க் செய்ய இடம் இருப்பதை உறுதி செய்கிறது. வீடுகளில் கார் நிறுத்த இடமில்லாதவர்கள், அதனை சாலையோரம் நிறுத்தாமல் பார்க்கிங் மையங்களில் கட்டணம் செலுத்தி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.


இந்த விதிமுறைகளை நிர்வகிக்கவும் செயல்படுத்தவும் அதற்கென பார்க்கிங் மேலாண்மை பிரிவை அமைக்க திட்டமிட்டுள்ளது. பல வீடுகளில் ஒரு காரை நிறுத்துவதற்கான இடம் மட்டுமே இருக்கும். ஆனால் மூன்று கார்கள் வைத்திருப்பார்கள். இரண்டு கார்களை சாலைகளில் நிறுத்துவார்கள். இது அண்டை வீட்டாருக்கு பிரச்சனை ஏற்படுத்தும்.

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும். இனி, பார்க்கிங் செய்வதற்காக இடம் இருப்பதற்கான ஆதாரம் இருந்தால் மட்டுமே காரை பதிவு செய்ய முடியும். சென்னை மாநகரில் பார்க்கிங் பகுதிகளை டாப், மிட் மற்றும் லோ என மூன்று நிலைகளாக வகைப்படுத்தி, பார்க்கிங் கட்டணங்களும் வகைப்படுத்தப்படும். அதே பகுதியில் தேவைக்கு ஏற்ப, கட்டண பார்க்கிங் மையங்களை உருவாக்கினால் மட்டுமே புதிய விதிமுறைகளை செம்மையாக செயல்படுத்த இயலும்.

உதாரணமாக, இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலை, அதிக பார்க்கிங் தேவை உள்ள பகுதியாக இருக்கலாம், இந்த இடங்களில் கூடுதல் கட்டணத்தில் பார்க்கிங் மையங்களை அமைப்பதென்றும் குறைந்த தேவை உள்ள பகுதிகளில் குறைவான கட்டணத்தில் பார்க்கிங் மையங்கள் ஏற்படுத்துவதென்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த போக்குவரத்து உள்ள பகுதிகளில் இலவசமாக பார்க்கிங் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த பார்க்கிங் கட்டண நிர்ணயம், மாநகரம் முழுவதும் பார்க்கிங் பகுதிகளை திறமையாக நிர்வகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரிய சாலைகளில் மட்டுமே பார்க்கிங் மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்படும். ஏலமுறையில் மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். இதனால் மக்களுக்கு தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய குறைவான கட்டணத்தில் கூட இடம் கிடைக்கலாம்.

மேலும் முக்கியமாக, வாகனத்தின் நிலை பாதுகாக்கப்படுகிறது. இது திருட்டு அல்லது வாகனம் சேதமடைதலில் இருந்து தடுத்து, பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
மேலும் வாகனத்தின் உட்புறத்தை மிதமான வெப்பநிலையில் பராமரிப்பதன் மூலம் எரிபொருள் சேமிப்பிற்கு பங்களிக்கிறது. ஏர் கண்டிஷனிங் அல்லது வெப்பமாக்கல் அமைப்பில் ஏற்படும் சுமையைக் குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல், வீடுகள் மற்றும் வணிக பகுதிகளை அழகாக வைத்திருக்கவும் உதவுகிறது.

பார்க்கிங் செய்யும் இடத்திற்கான சான்றிதழ் மற்றும் கட்டமைக்கப்பட்ட பார்க்கிங் மேலாண்மைத் திட்டங்களுடன், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் புதிய பார்க்கிங் கொள்கை, தலைநகரில் போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்கும் திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைத்துள்ளது.
நிச்சயம் இது வரவேற்கத்தக்க அறிவிப்பு தான்!

படிக்க வேண்டும்

spot_img