இந்தியாவில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் குழந்தை திருமணங் களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியால் துவக்கப்பட்ட பச்பன் பச்சாவோ அந்தோலன் தொண்டு நிறுவனம், மத்திய அரசின் சமூக நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையுடன் இணைந்து மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த இதில் பங்கேற்றவர்களிடம் வலியுறுத்தப் பட்டது.
சிறப்பு விருந்தினராக, தமிழ் நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி எஸ். பாஸ்கரன், தமிழக அரசின் சமூக நல ஆணை யரக கூடுதல் இயக்குநர் கார்த்திகா, முன்னாள் டிஜிபி பிஎம் நாயர் (ஓய்வு), சென்னை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் செயலாளர் ஆர் தமிழ் செல்வி, சென்னை குழந்தைகள் நலக் குழு தலைவர் ராஜ்குமார், திருவள்ளூர், குழந்தைகள் நலக் குழு தலைவர் மேரி ஆக்சிலியா ஆகியோர் பங்கேற்றனர்.
பச்பன் பச்சாவோ அந்தோலன் அமைப்பின் செயல் இயக்குநர் தனஞ்சய் திங்கல் பேசுகையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 7028 கிராமங்களில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை திருமணத்திற்கு எதிராக ஒரே நாளில் தெருக்களில் இறங்கி குரல் எழுப்பினர்.
மேலும் 20 மாநிலங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. வரும் 2030-க்குள் குழந்தைத் திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டுக் கனவை நனவாக்குவதற்கான முயற்சியாக இந்த ஆலோசனை கூட்டங்கள் அமைய உள்ளன என்றார்.
கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் தேசிய தலைவர் ரவிகாந்த் பேசுகையில், குழந்தைத் திருமணத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான தாக்கத்தையும், சமூகத் தீமையைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.