அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
நம் நாட்டை பொறுத்தவரை இந்திய குடியுரிமை பெற்ற பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதேபோல் தாய், தந்தையில் ஒருவர் நம் நாட்டை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில் பெற்றோர் கேட்டு கொண்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால் அமெரிக்காவில் சட்டம் என்பது வேறு விதமாக உள்ளது. பெற்றோரான தாய், தந்தை ஆகியோரில் இருவரும் வெளிநாடுகளை சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கும் பட்சத்தில் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கொடுக்கும் முறை உள்ளது.
இந்த சட்டம் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவர் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி முறைப்படி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று செயல்பட உள்ளார். இந்நிலையில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் வெளிநாட்டினருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
அதாவது அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் நாட்டில் நடைமுறையில் இருக்கும் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதான் தற்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது. அதாவது பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்காவில் குடியுரிமை ரத்து செய்யப்படும்போது தற்போது அங்கு அந்த சட்டத்தின் கீழ் பிறப்புரிமை பெற்றுள்ளவர்களும் குடியுரிமையை இழக்க நேரிடலாம்.
அதன்படி பார்த்தால் அமெரிக்காவில் வாழ் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அமெரிக்காவில் 48 லட்சம் இந்திய – அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். இதில் 34 சதவீதம் பேர் அதாவது 1.6 மில்லியன் (16 லட்சம் பேர்) அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
இந்த 16 லட்சம் பேரும் அமெரிக்காவின் பிறப்புரிமை சட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். டொனால்ட் டிரம்ப்பின் தற்போதைய அறிவிப்பு இந்த 16 லட்சம் இந்தியர்களும் குடியுரிமையை பறிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பெருவளர்ச்சியில் அங்கு வாழும் இந்தியர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அங்கு உயர் பதவிகளை அவர்கள் அலங்கரிப்பதே அதற்கு அத்தாட்சி. நடந்து முடிந்த தேர்தலிலும் டிரம்பிற்கு இந்தியர்கள் பெருவாரியான வாக்குகளை பதிவிட்டுள்ளனர்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டாவது அமெரிக்க குடியுரிமைச் சட்டத்தில் டொனால்ட் டிரம்ப் ஏதேனும் விதிவிலக்கு அறிவிக்க மாட்டாரா? என்ற ஏக்கத்தோடு அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஜனவரி 20ம் தேதிக்காக காத்திருக்கிறார்கள்!
அன்றைய தினம் டிரம்ப், அமெரிக்க குடியுரிமைக்கு வேட்டு வைப்பாரா? இந்தியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!