கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சியில் 18 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டன.
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பாக ஒரு நாள் அமெரிக்கக்கல்விக் கண்காட்சி அவினாசிலிங்கம் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் 18 அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் அவினாசிலிங்கம் நிறுவனத்திற்கு வருகை புரிந்தனர்.
மாணவர்களுக்கு ஆராய்ச்சியின் உந்துதல், அந்தந்த துறைகளில் புதிய ஆய்வுக் களங்கள் பற்றிய கல்வி வெளிப்பாட்டை வழங்கும் வகையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், முக்கிய அம்சங்களாக, கல்விசார் ஒத்துழைப்பை வளர்த்தல், அதிநவீன ஆராய்ச்சியை ஊக்குவித்தல்.
இரட்டைக்கல்வித் திட்டங்களை வடிவமைத்தல், கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் சாத்தியமான கூறுகளைக் கண்டறிதல் போன்றவை இடம்பெற்றன.
இந்த கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
இதில் அவினாசிலிங்கம் பல்கலை கழகத்தின் வேந்தர் முனைவர் மீனாட்சி சுந்தரம், துணை வேந்தர் முனைவர் பாரதி ஹரி சங்கர், பதிவாளர் முனைவர் கவுசல்யா, டீன் முனைவர் வாசுகி ராஜா, துணை நிர்வாக அறங்காவலர் முனைவர் கவுரி ராமகிருஷ்ணன் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஸ்காட் ஹட்ரிமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புத் திட்டங்களைப் பற்றிய விரிவான பார்வையை வழங்கும் விதமாகவும், அதே நேரத்தில் அவினாசிலிங்கம் நிறுவனத்தில் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியின் உந்துதல் பகுதி குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தபடுகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்க நாட்டிற்கு கல்விக்காக வரும் மாணவர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் விசா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கல்வி பயல வரும் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.