கோவையில் ஒரே மேடையில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ மத மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தின் சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர்.
75 பெண்களுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு, சென்னையில் 17 ஜோடிகளுக்கும், திருச்சியில் 25 ஜோடிகளுக்கும் கல்யாணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் ஏழை எளிய பெண்கள் 23 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட ஏராளமான இருந்து வந்து திருமண விழாவில் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மணமக்கள் மணவறைக்கு கேரள சண்டை மேளம் முழங்க உற்சாகமுடன் வரவேற்கப்பட்டனர்.
நல்லிணக்கம் வெளிப்படும் விதமாக ஒரே இடத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சார்ந்த 23 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆறு ஜோடி இந்துக்கள், மூன்று ஜோடி கிறிஸ்தவர்கள், பதினான்கு ஜோடி இஸ்லாமியர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
உற்சாகமுடன் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தனர் . இதில் 23 ஜோடிகளுக்கும் 2 லட்சம் மதிப்பிலான கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள், மளிகை சாமான்கள் சீர்வரிசை தரப்பட்டன.
10 கிராம் தங்கமும் தரப்பட்டன. இதில் ஒவ்வொரு மதத்தவருக்கும் அவரவர் மதங்களின் வழிகாட்டுதலாக இருக்கும் குர்ஆன் பைபிள் பகவத் கீதை தரப்பட்டன.
இந்த விழாவில் கலந்து கொண்ட 2000 பேருக்கும் அசைவு உணவு பரிமாறப்பட்டன. வறுமையில் வாடிய ஏழை எளிய பெண்களுக்கு வாழ்வில் மிக முக்கியமான தருணத்தை ஏற்படுத்தித் தந்த அமைப்பினருக்கு மணமக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மனதார அவர்களை பாராட்டினர்.