fbpx
Homeபிற செய்திகள்சமயோசித புத்தியோடு தொழில்நுட்பங்களை கற்றறிந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்- கதிர் கலை, அறிவியல் கல்லூரி விழாவில்...

சமயோசித புத்தியோடு தொழில்நுட்பங்களை கற்றறிந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்- கதிர் கலை, அறிவியல் கல்லூரி விழாவில் இன்போசிஸ் இணை துணை முதல்வர் பேச்சு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் KREATE-2K25 என்னும் கருப்பொருளில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இன்போசிஸ் கல்வி பிரிவின் இணை துணை முதல்வர் விக்டர் சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது: மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனத்தில் கல்வி பயணிகள் சிறந்த கல்வியே தனிமனித வாழ்க்கையை உயர்த்தும். தனிமனித வாழ்க்கை என்பது சமுதாயத்தோடும் வாழ்வியலோடும் தொடர்புடையதாகும். கல்வியை உரிய நேரத்தில், உரிய காலத்தில் பெற்றுவிட வேண்டும். அதே சமயம் மாணவர்கள் எப்போதும் சிறப்புடன் செயலாற்றுவதற்கு சில வழிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். திறனுடன் கல்வி முறையினை கற்றுக் கொள்வது.

சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமயோசித புத்தியை வளர்த்துக் கொள்வதோடு தொழிற்சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிந்து வைத்து அதற்கு ஏற்ப மாணவர் தன்னுடைய அறிவை பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும், மாணவர்கள் பல்வேறு வகைகளில் தன்னை தகவமைத்துக் கொள்ளுதல் வேண்டும். வெற்றி என்பது நாம் செய்கிற செயலின் அடிப்படையில் அமைகிறது. முயற்சிகள் தோற்கலாம் முயற்சிப்பவன் தோற்கக் கூடாது என்கிற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி கல்வியிலும் வாழ்க்கையிலும் மாணவர்கள் வெற்றியடைய வேண்டும்.

உழைப்பு என்கிற உரத்தை நாம் அனுதினமும் இட்டுக் கொண்டே இருந்தால் தான் பயிர் செழித்து வளரும் அதுபோல மாணவர்கள் தினம் தினம் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு பக்கத்தையாவது படிக்க வேண்டும். அதே சமயம் மனதையும் உடலையும் தூய்மையுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொண்டால் கல்வி நமது வசமாகும்.

ஏராளமான வேலைவாய்ப்புகள் இன்போசிஸ், கூகுள் போன்ற நிறுவனங்களில் இளைஞர்களுக்காக கொட்டிக் கிடக்கின்றன. அதனை தங்களுடைய திறமையின் மூலமாக மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

அதன் பின்பாக இந்த ஆண்டின் சிறந்த துறை, சிறந்த மாணவ, மாணவிகள், 100 சதவீதம் வருகைப்பதிவு என்று பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார். இவற்றைத் தொடர்ந்து வெள்ளித் திரையிலும் சின்னத்திரையிலும் புகழ்பெற்று விளங்கும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

அதிலும், குறிப்பாக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் புகழ் சௌந்தர்யா,, இன்ஸ்டாகிராம் புகழ் அருணாச்சலேஸ்வார், விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ஃபெபின் பாரீத் பிள்ளை மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கு கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் ஈ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர் ஆகியோர் தலைமை தாங்கினர். கதிர் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் ஈ.எஸ்.கே.மிதிலேஷ், துணைச் செயலர் டாக்டர் எம்.விதுபிரதிக்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கற்பகம் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இவ்விழாவினை மாணவர் கவுன்சில், விளையாட்டு கவுன்சில், மீடியா டீம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைப்பு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img