fbpx
Homeதலையங்கம்சைபர் கிரைம் மோசடிகள் இந்தியாவில் ஆதிக்கம்!

சைபர் கிரைம் மோசடிகள் இந்தியாவில் ஆதிக்கம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) தொகுத்த தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இணைய மோசடியால் இந்தியா தோராயமாக ரூ.11,333 கோடியை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2,28,094 புகார்கள் பெறப்பட்ட நிலையில், ரூ.4,636 கோடி இழப்புகளுடன் பங்கு வர்த்தக மோசடிகள் முதன்மையானதாக இருக்கிறது.
முதலீட்டு அடிப்படையிலான மோசடிகளால் 1,00,360 புகார்களில் இருந்து ரூ.3,216 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயம் 63,481 புகார்களில் “டிஜிட்டல் கைது” மோசடிகளால் ரூ.1,616 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சைபர் கிரைம் மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்ப உதவிகளுடன் முன்னெடுத்து வருகிறது.

கடந்த ஆண்டில், ஐ4சி ஆனது, சைபர் கிரைம் மூலம் கிடைக்கும் பணத்தை பரிவர்த்தனை செய்ய பயன்படுத்திய சுமார் 4.5 லட்சம் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
தொலைத்தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து செயல்படும் சைபர் கிரைமினல்களுடன் இணைக்கப்பட்ட 17,000 வாட்ஸ்அப் கணக்குகளையும் ஐ4சி முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்.
சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் விதவிதமாக யோசித்து தங்கள் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக முதியவர்களைக் குறிவைத்து காய் நகர்த்தும் அவர்களின் வலையில் இளைஞர்களும் படித்தவர்களும் கூட சிக்கி பெரும் தொகையை இழந்து வருவது வேதனை தரும் செய்தியாகும்.
சைபர் மோசடிகளின் பகுப்பாய்வு, காசோலைகள், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம், ஃபின்டெக் கிரிப்டோ, ஏடிஎம்கள், வணிகர் கொடுப்பனவுகள் மற்றும் இ-வாலட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி திருடப்பட்ட பணம் மட்டும் பெரும்பாலும் சைபர் கிரைம் போலீசாரால் மீட்டுத்தரப்படுகிறது.

என்னதான் நடவடிக்கைகளை மத்திய அரசும் போலீசாரும் எடுத்தாலும், சைபர் கிரைம்கள் குறைந்தபாடில்லை, மாறாக எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தானிருக்கிறது. நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் விழிப்புணர்வு தான் மிகமிக அதிகமாகத் தேவைப்படுகிறது. ரிசர்வ் வங்கியும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை மீடியாக்கள் மூலம் அதிகளவில் செய்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கூட, சமீபத்தில் தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் 115 வது பதிப்பின் போது “டிஜிட்டல் கைது” மோசடிகள் குறித்து குடிமக்களை எச்சரித்து உச்சகட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதுபோன்ற மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்தியாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கும் சைபர் கிரிமினல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே செயல்படுகின்றனர்.
நகரங்கள், கிராமங்கள் என அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கின்ற காரணத்தால் 100 பேருக்கு வலை விரித்தால் ஒருவராவது சிக்காமலா போவார்? என்பது கிரிமினல்களின் கணக்கு. அவர்களின் கணக்கு ஒர்க்அவுட் ஆகி, நமது வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணம் கோடிகோடியாக துடைக்கப்படுகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வுகள் இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விஷயம் குறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் விவாதிக்க வேண்டும். அரசு தரப்பில் கொரோனா காலத்தில் எடுத்ததைப்போன்ற விழிப்புணர்வை இந்த சைபர் கிரைம் குறித்தும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
அனைவரும் ஒருங்கிணைந்து சைபர் கிரைம் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதிகொள்வோம்!

படிக்க வேண்டும்

spot_img