கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்படும் வரும் நிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் வாகன விபத்துகளை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சாலை பாது காப்பை உறுதி செய்யவும் சாலைகளில் வாகனங்களை இயக்கம் போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் அரசு பேருந்து நடத்துநரான அறிவழகன் என்பவர் சைக்கிளில் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சிலம்பம் சுற்றி கொண்டு செல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வட்டாட்சியர் சந்திரன் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சிறுமுகை சாலையில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன்பாளையம், துடியலூர் வழியாக கோவை அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் நிறைவடைய உள்ளது.
50கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் பயணம் செய்யும் அரசு பேருந்து நடத்துநர் அறிவழகன் செல்லும் வழி முழுவதும் சிலம்பம் சுற்றி கொண்டு சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து சென்றார்.