fbpx
Homeபிற செய்திகள்தமிழ்த்தாய் வாழ்த்து உணர்த்தும் பாடம்!

தமிழ்த்தாய் வாழ்த்து உணர்த்தும் பாடம்!

‘டிடி தமிழ்’ சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையம் நடத்திய இந்தி மாதம் நிறைவு நாள் விழாவில் நேற்றைய தினம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, அதில் இடம்பெற்றுள்ள ’தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டதால் சர்ச்சை எழுந்தது.

இதற்கு திமுக, அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட அனைத்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகச் சாடியிருந்தார். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. மேலும் டிடி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமும் மன்னிப்பு கேட்டிருந்தது. என்றாலும், இவ்விவகாரம் தொடர்ந்து விவாதத்தை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஓர் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது; மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதுஎன தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதில் தரும்வகையில்,அப்படியே தவறு நிகழ்ந்திருந்தாலும் மேடையிலேயே அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி தமிழ்த்தாய் வாழ்த்தை திருத்தி பாடச் சொல்லியிருக்கலாமே, மேடையிலேயே கண்டித்து இருக்கலாமே` என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.

முன்னதாக டிடி தமிழ் சார்பில் தமிழ்நாட்டில் இந்திக்கு மட்டும் விழா எடுப்பது நியாயமல்ல, அது தமிழை புறக்கணிப்பதற்கு சமம். தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்கும் விழா எடுப்பார்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு விவாதமாக மாறி இருந்த நிலையில், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எவ்வளவு கவனமாக இருந்திருக்க வேண்டும்?

தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழ், திராவிடம் என்ற சொற்கள் கொண்ட வரிகள் பாடப்படாதது கவனக்குறைவாகவே இருக்கட்டும். பொது இடத்தில் சர்ச்சையான ஒரு கருத்து வெளிப்படும்போது, சமயோசிதமாக அந்த மேடையிலேயே அதற்கான தீர்வை கண்டு உடனடியாக நிவர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதைத் தான் இந்நிகழ்வு உணர்த்துகிறது.

தவறு உடனடியாக அறியப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த கணமே அதனைச் சரி செய்திருக்க வேண்டும் அல்லவா?. அப்படி செய்திருந்தால் பிரச்னைக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்திருக்ககலாம். விளக்கம்… விளக்கத்திற்கு விளக்கம்… என ஆளுநர் & முதல்வர் மோதல் இடையே உச்சகட்ட மோதலும் வந்திருக்காது.

தமிழ்நாட்டையும் தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிப்போர் எவராக இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் இந்த நிகழ்வு தரும் பாடம் & எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்பது தான்!

படிக்க வேண்டும்

spot_img