fbpx
Homeபிற செய்திகள்உலக வல்லரசுகளின் நாடு பிடிக்கும் ஆசை!

உலக வல்லரசுகளின் நாடு பிடிக்கும் ஆசை!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் இரண்டாண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைந்தால் தனது நாட்டுக்கு ஆபத்து; அதனால் தான் போர் என்கிறார், வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்ய அதிபர் புதின்.

உக்ரைனை ஆக்கிரமித்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டால், பெரும் ஆயுதபலம் கொண்ட நேட்டோ நாடுகளால் எளிதில் நெருங்கமுடியாது என்பது புதினின் கணிப்பு. அதற்காக போர் தொடங்குவதா தீர்வு?

இன்னொரு பக்கம், தைவான் நாட்டின் நிலப்பரப்பு முழுவதுமே தங்களுக்குத் தான் சொந்தம் எனக்கூறி அந்நாட்டைக் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது மற்றொரு வல்லரசு நாடான சீனா. இந்திய நிலப்பரப்பிலும் சில பகுதிகளை தங்கள் இடம் என சொந்தம் கொண்டாடுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்?

எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்புத் திட்டத்தை வல்லரசுகளில் தனது நாடே நம்பர் 1 என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளப் போவதாக அவர் தனது பேராசையை சர்வாதிகாரி போல வெளிப்படுத்தி இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது என்ன பாராட்டக்கூடிய அறிவிப்பா?

பண்டைய காலத்தில் பிறநாடுகளைக் கைப்பற்ற மன்னர்கள் போர் தொடுத்த வரலாறுகளை எல்லாம் நாம் அறிவோம். வாள், அம்பு, ஈட்டிகளை ஆயுதங்களாகக் கொண்டு நவீன போக்குவரத்து வசதிகளே இல்லாத அந்த காலத்திலேயே போரில் வீரர்கள் மட்டும் இன்றி பல்லாயிரம் அப்பாவி மக்களும் மாண்டார்கள்.

இன்றைக்கு அப்படியல்ல. அதிநவீன போர் விமானங்கள் – கப்பல்கள், கொத்துக்கொத்தாக உயிர்களைக் கொல்லும் பயங்கர ரசாயன குண்டுகள், கண்டம் விட்டு கண்டம் தாவித் தாக்கும் ஏவுகணைகள் எல்லாவற்றிற்கும் மேலாக உலகையே ஓரிரு தாக்குதலில் அழித்தொழிக்கும் அணு குண்டுகளையும் சில நாடுகள் தன்வசம் வைத்துள்ளன.

இன்றைக்கு பெரும் போர் மூண்டால் அளவில்லா உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படுவதைத் யாராலும் தடுக்க முடியாது. மன்னராட்சி முடிவுக்கு வந்து பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்னரும் இந்த நவீன அறிவியல் உலகத்தில் பிற நாடுகளை வல்லரசுகள் ஆக்கிரமிக்க நினைப்பதை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எந்த ஒரு நாடாக இருந்தாலும் அது ராணுவ பலம் குறைந்த சிறிய நாடாக இருந்தாலும் அதற்கென வீரம், கலாச்சாரம், பண்பாடு இருக்கும். ஒவ்வொரு குடிமகனும் தன் நாட்டுக்காக உயிரை விடுவானே தவிர ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான். நாடு பிடிக்கும் போக்கால் மோசமான விளைவுகள் ஏற்படுவதோடு உலக அமைதிக்கும் ஊறு விளைவித்து விடும்.
இந்த நாடு பிடிக்கும் ஆசை வல்லரசு நாடுகளுக்கு தோன்றி இருப்பது வேதனை தரும் விஷயமாகும். அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் உலக நலன் கருதி விசால மனத்துடன் சிந்திக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img