தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு தியாகி தீர்த்தகிரியார் பெயர் பலகையை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாதாரண கூட்டம்
தர்மபுரி நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார்.
நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார். தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தியாகி தீர்த்தகிரியார் பெயர் பலகை அகற்றப்பட்டது.
அந்தப் பெயர் பலகை மீண்டும் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் முருகவேல், பாண்டியன், சம்பந்தம், கவிதாயுவ ராஜ், அ.தி.மு.க. கவுன்சிலர் மாதேஸ் ஆகியோர் வலியுறுத்தினர். இது தொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர்.
கூட்டத்தில் நகராட்சியில் திடகழிவு மேலாண்மை பணி, டெங்கு தடுப்பு பணி, பிளாஸ்டிக் தடை குறித்து நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், டெங்கு தடுப்பு தற்காலிக பணியாளர்கள் பணி நீட்டிப்பு, தெரு நாய்களை பிடித்தல், தூய்மை இந்தியா திட்டத்தில் சமுதாய பொது கழிவறைகள் பராமரிப்பு குறித்து பொது மக்கள் புகார் செய்ய க்யூஆர் குறியீடு பொருத்துதல், கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிக்கு தனியார் ஜே.சி.பி. பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக பிரகடனப்படுத்துதல், பிளிச்சிங் பவுடர் சுண்ணாம்பு வாங்குதல், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை வசூலிக்க நடவடிக்கை எடுப்பது, ரெயில்வேக்கு சொந்தமான அணுகு சாலையை அமைக்க அனுமதி அளிப்பது, அன்னை சத்யா நகரில் சுற்றுசூழல் பூங்கா அமைக்க அனுமதி, பச்சையம்மன் கோயில் மயானம் சீரமைப்பு பணி, நகர் மன்ற கூட்டரங்கு சீரமைப்பு, நமக்கு நாமே திட்டத்தில் 12 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்தல் உள்பட 56 தீர்மானங்கள் அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது.