தருமபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்தில் இரயில்வே திட்டப் பணிகள் 2010-11 கீழ் வெண்ணாம்பட்டி சாலை கி.மீ.0/8-ல் இரயில்வே கடவு எண்.41-க்கு மாற்றாக தருமபுரி- சிவாடி இரயில் நிலையங்களுக்கு இடையில் பாரதிபுரம் 66 அடி சாலையில் சாலை மேம்பாலம் அமைத்தல் மற்றும் இரயில்வே நடைபாதைச் சுரங்கம் அமைத்தல் பணிக்கான முன்னேற்பாடு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இப்பணியானது கடந்த 01.04.2023 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் துறைக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான நிர்வாக ஒப்புதல் பெற தேவையான கருத்துரு ரூ.36.15 கோடிக்கு 23.05.2023 அன்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி பணிக்கு நிலஎடுப்பு, முன் ஆயத்தப்பணி மற்றும் சேவைச் சாதனங்களை மாற்றியமைத்தல் பணிகளும், நிலஎடுப்பிற்கான இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கும் பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
நிர்வாக ஒப்புதல் பெற்றவுடன் இப்பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) பிரபாகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.