கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விலங்குகள் கருத்தடை குறித்த கண்காணிப்பு மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் கூறியதாவது: ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை செய்ய ஓசூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் ஒரு கருத்தடை மையமும், கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் பர்கூரில் தலா ஒரு கருத்தடை மையமும் அமைத்திட உரிய வழி முறைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒசூரில் செயல் பட்டு வரும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்படும் தெரு நாய்களின் எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு 25-ல் இருந்து 40 ஆக உயர்த்த உரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் பிரசன்னா, உதவி இயக்குநர்கள் அருள்ராஜ், மகேந்திரன், ஜோதிபாசு, ரவிச்சந்திரன், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நோய் நிகழ்வியல் அலுவலர் அமிர்தவள்ளி, நகராட்சி மருத்துவ நல அலுவலர் கணேசன், பேரூராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிராணிகள் வதை தடுப்புச்சட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.