fbpx
Homeபிற செய்திகள்தீபாவளி மகிழ்ச்சி!

தீபாவளி மகிழ்ச்சி!

ஒளிதரும் விளக்குகளாலும் அலங்காரப் பொருள்களாலும் இல்லங்களுக்கு அழகுசேர்த்து, புத்தாடை வாங்கி, தின்பண்டங்கள் செய்து, பட்டாசு வெடித்து உற்றார், உறவினரோடு தீபாவளியை கொண்டாடத் தயாராகி விட்டோம்.

தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து இருள் போக்கி ஒளி பரப்பும் இத்திருவிழா, நம்முடைய அக இருளை நீக்கி மகிழொளியைக் கொண்டு வருவதற்கான தருணம்.
இந்த விழாக்காலத்தில், சவால்களைச் சந்திக்கும் சமூகத்தில் உள்ளவர்களை நினைத்துப் பார்த்து அவர்களது வாழ்வில் ஒளியூட்ட முனைவோம். கொடை அளிப்பது அன்பின் வெளிப்பாடு என்பதைத் தாண்டி, ஒற்றுமையையும் பரிவையும் பறைசாற்றும் செயல்.

மூத்தோர், குறைந்த வருமானமுடைய குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர், சிறப்புத் தேவையுடையவர்கள், பிறப்பாலோ, நோய்வாய்ப்பட்டோ, விபத்தாலோ உடற்குறை ஏற்பட்டோர் என சமூகத்தில் மற்றவர் உதவியை நாடியுள்ளோர் நிறைய பேர் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்ற உணர்வு நம்மிடம் மங்கிப்போகாமல் புதுப்பித்துக் கொள்ள இதுபோன்ற பண்டிகைகள் துணை புரிகின்றன.

வாழ்வில் நமக்குக் கிடைத்த செல்வங்களை சிறிதேனும் இல்லாதோருடன் பகிர்ந்து அவர்களது மனங்களில் நம்பிக்கையை அளித்தால் அதுவே உண்மையான தீபாவளி மகிழ்ச்சி. அதனால் தான் ஏழைகளாக இருந்தாலும் குறைந்தபட்சம் உறவினர்கள் மட்டுமின்றி அக்கம்பக்கம் இருப்பவர்களுக்கு இனிப்பு வழங்கி ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர்.

பல்லின சமூகங்கள் வாழும் இந்தியத் திருநாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய கொண்டாட்டமாக தீபாவளி இருக்கவேண்டும் என்பதால் தான், இனம், மொழி, சமய பேதமின்றி பரிவுடனும் பாசத்துடனும் பல சமூக அமைப்புகளும் தனிமனிதர்களும் முன்வந்து தேவை உள்ளவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை வழங்கி வருகின்றனர். இது இருதரப்பினருக்கும் மகிழ்வைத் தரும் நிகழ்வுகளாகும்.

குடும்பத்தினருடனும் சமூகத்தினருடனும் ஒன்றுசேர்ந்து இல்லத்திலும் உள்ளத்திலும் புத்தொளியும் நற்சிந்தனையும் பரவ, குதூகலத்துடன் கொண்டாடுவோம். பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ்வோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img