நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் வரவேற்றார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, திமுக மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன்பிரசன்னா மற்றும் சமூக வலைதள பயிற்சியாளர் இளமாறன் ஆகியோர் பங்கேற்று, திமுகவின் முந்தைய கால வரலாறு குறித்தும், எதிர்காலத்தில் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
முன்னதாக, இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தில் சிறப்பான தீர்ப்பை பெற்றுத் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர்கள் சீனிவாசன், ஆனந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணைமேயர் செ.பூபதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.