கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனச்சரக பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் வழித்தடப்பாதை இவ்வனப் பகுதியில் உள்ளதால் வலசை செல்லும் யானைக்கூட்டங்கள் கடந்து செல்வது வழக்கம்.
இடம் பெயர்ந்து செல்லும் யானைகள் வனத்தினுள் தங்களது தாகம் தீர்க்க தண்ணீர் கிடைத்தால் கடந்து சென்றுவிடும். காட்டுக்குள் தண்ணீர் கிடைக்காத போது அவை காட்டை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் புகுந்து விடும். நீரைத் தேடி யானைகள் கிராமங்களுக்குள் புகுவதை தடுக்கும் நோக்கில் வனத்தினுள் ஆங்காங்கே சுமார் 32 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த தொட்டியில் இருக்கும் நீரை அருந்தும் யானைகள் அமைதியாக கடந்து சென்று விடுகின்றன. தற்போது கோடை காலம் துவங்கும் முன்னரே மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் வறட்சி உருவாகியுள்ளது. வனப்பகுதியில் போதிய அளவு பருவ பெய்யாத காரணத்தினாலும் வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கியதாலும் வனத்தினுள் இயற்கையான குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் வறண்டு வருகின்றன.
இதனால் யானை கூட்டங்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி களை தேடி வர துவங்கியுள்ளன. ஆனால், இவ்வனச்சரகங்ளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் போதிய பராமரிப்பின்றி பயனற்று கிடக்கின்றன. பல இடங்களில் தொட்டிகளில் நீர் நிரப்ப பயன்படுத்தும் ஆழ்குழாய் மோட்டார்கள் பழுதாகி கிடப்ப தால் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெறுவதில்லை.
சில தொட்டிகளை மாதக்கணக் கில் சுத்தப்படுத்தாமல் இருப்பதால் அதில் உள்ள நீர் கெட்டு போய் பச்சை பசேலென பாசிகள் நிரம்பி காணப்படுகின்றன. யானைகள் சுத்தமான நீரை மட்டுமே அருந்தும் இயல்புடையவை என்பதால் இந்நீரை அவை அருந்துவதில்லை. இதனால், தூய்மையான நீரை தேடி யானைகள் பரிதாபமாக அலைந்து வருவதால் இவை நீருக்காக வனத்தை ஓட்டியுள்ள ஊர்களுக்குள் புகும் அபாயம் அதிகரித்து வருகிறது.
எனவே யானை-மனித மோதல்கள் உருவாவதை கட்டுப்படுத்த இவ்விஷயத்தில் வனத்துறையினர் தீவிர கவனம் செலுத்தி போர்கால அடிப்படையில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பராமரித்து தினசரி அதில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.