அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா -தினகரன் இடையே மோதல்கள் வெடித்து கட்சி பல
துண்டுகளாக சிதறியது.
இந்த நிலையில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும், ஓ பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உள்ள தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை என்ற பேச்சு நீடித்தது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதனை மாற்றி தென் மாவட்டங்களிலும் தன்னுடைய பலத்தை காட்ட நினைத்தார், எடப்பாடி பழனிசாமி. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுதான் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு.
மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர்
என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் பேசுகையில், “ மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். இந்த மாநாடு 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்று சரித்திர சாதனை படைத்து உள்ளது. இந்த அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு சரித்திர சாதனையை படைத்து இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளையும், ஆளும் திமுக அரசு மீதான விமர்சனங்களையும் எடப்பாடி பழனிசாமி அடுக்கினார். ஆனால், அவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தோ, சசிகலா, தினகரன் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதால், இவர்களை விமர்சித்து பேசினால் அந்த மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். அது நடந்தால் இவ்வளவு பெரிய மாநாட்டை கூட்டியதே பயனற்றதாகிவிடும் என்று எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களை விமர்சிக்காமல் கடந்து சென்று இருக்கலாம் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
ஆம், முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் ஒரே நோக்கத்தில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாநாட்டை நடத்தி உள்ளார். இதற்கு ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் என்ன எதிர்வினையாற்றப் போகிறார்களோ, தெரியவில்லை.
தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு உயருமா?