fbpx
Homeதலையங்கம்தடையை தகர்த்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி!

தடையை தகர்த்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி!

2020 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் எழுச்சி மிக்க போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தை ஒன்றிய அரசு பல வழிகளில் ஒடுக்கப்பார்த்தது.

ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக கடும் குளிர், மழை, தடியடி, உயிரிழப்புகள் என அனைத்தையும் தாங்கி ஒன்றிய அரசை தங்களது கோரிக்கைக்குப் பணியவைத்தார்கள் விவசாயிகள். இதன் விளைவு மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்தியது.

பிறகு பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி எதையும் ஒன்றிய அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியான, ராஜஸ்தான் விவசாயிகள் தங்களின் வீரியம்மிக்க போராட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளனர்.

தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்க மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக அறிவித்த விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடுவதில் உறுதியாக இருக்கின்றனர்.

மறுபுறம் காவல்துறையினர் தரப்பில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர் கொண்ட சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. 144 தடை உத்தரவும் போடப்பட்டு உள்ளது. பேரணியின் முதல் நாளான நேற்று பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பெரும் மோதல் வெடித்திருக்கிறது. ஹரியானா காவல்துறையினர் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைகுண்டுகளை வீசியுள்ளனர்.

மட்டுமல்லாது ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர். இதில் 60 விவசாயிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், தடைகளைத் தகர்த்து இரண்டாம் நாளான இன்று டெல்லியை நோக்கிய பேரணி தொடர்கிறது.

விவசாயிகள் போராட்டம் மீண்டும் வெடித்திருப்பதற்கு தற்போதைக்கு ஒரே காரணம் ஒன்றிய அரசுதான். முந்தைய போராட்டத்தின்போது ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் ஒரே காரணம். விவசாயிகள் தொடர்ந்து போராட்ட எச்சரிக்கை விடுத்தபடிதான் இருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஒன்றிய அரசை நாடே நம்பி இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டியது அதன் கடமை. இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தை சாதகமாகப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

அதனைச் செய்யாததால் டெல்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் இன்றைக்கு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி பதட்டநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு முற்பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல ஆகிவிடக் கூடாது.

எனவே விவசாய சங்கத் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற சிறிது காலஅவகாசம் கேட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய அவசரம்… அவசியம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தின் வேகம் அதிகரிக்கும் முன், பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டாவது ஒன்றிய அரசு செவி சாய்க்குமா? என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி என நாடே எதிர்பார்க்கிறது!

படிக்க வேண்டும்

spot_img