fbpx
Homeதலையங்கம்5 மாநில தேர்தலும் ராகுல் யாத்திரையும்!

5 மாநில தேர்தலும் ராகுல் யாத்திரையும்!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பாஜக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

தற்போது தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவும் தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும் (பி.ஆர்.எஸ்) மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவும் காங்கிரசும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ்., பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நடக்கப் போகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தற்போது வெளியாகி உள்ள Lok poll கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

அதனைத் தொடர்ந்து பிக் டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 62 முதல் 69 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், தற்போதைய ஆளும் கட்சியான பிஆர்எஸ் கட்சி 46 முதல் 54 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தான் கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

ராகுலின் யாத்திரை நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக பெரும் அதிர்வலைகளை உருவாக்கி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்கனவே கூறி இருந்தார்.
அது உண்மை தான் என்பதைத்தான் தெலுங்கானா தேர்தல் கருத்துக் கணிப்புகள் உணர்த்துகின்றன.

அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைகீழாக மாற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா, அங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்பதே முக்கிய செய்தியாக பேசப்படுகிறது.
இதற்கு ராகுலின் யாத்திரையே முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.
இதுவே பாஜகவுக்கு பின்னடைவு தானே!

படிக்க வேண்டும்

spot_img