75 ஆண்டுக்கு முன் அரசுப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நூற்றா ண்டு விழா, ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாண வர்கள் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் இதே பள்ளியில் 1950 முதல் 1960 வரை பயின்ற 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை கல்வி சீராக தட்டில் வைத்து கொண்டு வந்தனர். பின்னர் ஆரம்பப் பள்ளியில் பயின்றதை நினைவு கூறும் விதமாக, ஆசிரியை வகுப்பறையில் மாணவர்களின் வருகை பதிவேடு எடுக்கும்போது முன்னாள் மாணவர்கள் “உள்ளேன் அம்மா” என கூறி 75 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி பாடம் எடுக்க முன்னாள் மாணவர்கள் மேசையில் அமர்ந்து பாடம் கற்றுக்கொண்டனர்.
இதேபோல தமிழ் மொழியின் முதல் எழுத்து க்களான அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை ஆசிரியர் கரும்பலகையில் எழுதி கற்றுக்கொடுக்க அதை 70 முதல் 75 வயதான முன்னாள் மாணவர்கள் படித்து ஒப்பித்து மகிழ்ந்தனர். 75 வருடங்களுக்கு முன்னால் படித்த மாணவர்கள் வயதான தோற்றத்தில் வந்து மீண்டும் ஆரம்பக்கல்வி கற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.