தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர கட்சிகள் இலவசத் திட்டங்கள் அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து விட்டது. இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கைகள் இனி இருக்கப் போவதில்லை. மறுபக்கம் சில இலவசத் திட்டங்களுக்கு எதிராக பலரும் விமர்சிப்பதும் உண்டு.
தமிழகத்தில் இலவசத்திட்டம், சலுகைத்திட்டம் என்பது சுமார் 58 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. ‘மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என 1967 சட்டமன்றத் தேர்தலின்போது அறிஞர் அண்ணா வாக்குறுதி கொடுத்தார். ஆட்சியைப் பிடித்தார் அண்ணா. ஆனால், லட்சியத்தை நிறைவேற்றுவதில் தடங்கல். அதனால் ஒரு படி அரிசி திட்டத்தை சாத்தியப்படுத்தினார்.
அதேபோல ஒவ்வொரு அரசும் தரும் 20 கிலோ இலவச அரிசி, ஏழை மக்களின் பசி போக்கும் திட்டம் என்பதால் தொடர்ந்து ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
கல்விக்கும் மருத்துவத்திற்கும் அரசு தரும் இலவசங்கள் எப்போதுமே வரவேற்கத் தகுந்த ஒன்றாகவே இருக்கின்றன.
காமராஜர் அரசின் மதிய உணவுத் திட்டம், பள்ளிச்சீருடை, எம்ஜிஆர் அரசின் சத்துணவுத் திட்டம், காலணி, பல்பொடி, கலைஞர் அரசின் மதிய உணவுத்திட்டத்தில் முட்டை, பேருந்து பயண அட்டை, ஜெயலலிதா அரசின் மடிக்கணினித் திட்டம், மிதிவண்டி, சீருடைத் திட்டம், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் மாணவர் உதவித்திட்டம், காலை உணவுத் திட்டம் போன்றவை போற்றத் தகுந்தவையே. ஏனென்றால், கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதைச் செய்து தரவேண்டியது அரசின் கடமை.
மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் விடியல் பயணம் போன்ற இலவசத்திட்டங்களையும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டைப் பின்பற்றி, இதுபோன்ற இலவச திட்டங்களை கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து ஆட்சியைப் பிடித்தபின் அந்த திட்டங்களை அரசியல் கட்சிகள் நிறைவேற்றி வருகின்றன. தமிழகத்தின் இலவசத் திட்டமான மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், கனடாவிலும் செயல்படுத்தப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன் பிரதமர் மோடி இலவசங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் அவருக்கு கர்நாடக மாநில தேர்தல் சரியான பாடம் புகட்டியது. இன்றைக்கு இலவச திட்டங்கள் தான் தேர்தல் வெற்றியை உறுதிசெய்வதில் முக்கிய பங்காற்றும் நிலை உருவாகி வருகிறது.
டெல்லியில் மகளிருக்கு மாதம் ரூ.2500 தருவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த பாஜக, அந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. பிரதமர் மோடியால் கூட இனி இலவச திட்டங்களை அறிவிப்பதில் இருந்து தனது கட்சியைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கித் தான் அனைத்துக் கட்சிகளும் பயணிக்கின்றன.
இலவசங்கள் அவசியமா? அநாவசியமா? என்ற தலைப்பில் பட்டிமன்ற விவாதங்கள் மக்கள் மேடைகளில் நடந்து கொண்டிருந்தாலும் அவசியம் என்றே பெரும்பான்மை மக்கள் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அனுபவித்து பழகிவிட்ட இலவசச் சலுகைகளை இழக்க எந்தக்காலத்திலும் அவர்கள் முன்வர மாட்டார்கள்.
இலவசங்கள் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் பலரால் முன்வைக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றம் கூட இது தொடர்பான கேள்விகளை எழுப்பி இருந்தது. ஆனாலும் இலவசங்கள் ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதையும் மறுக்க முடியாது.
இதையெல்லாம் அரசுகள் உணர்ந்திருந்தாலும்கூட, ‘மக்களுக்கு இலவசம் தருதல்’ எனும் புலிவாலைப் பிடித்துவிட்டன. அதை விட்டுவிட்டால் புலி பாய்ந்து குதறிவிடும் என்பதால் அதன் பின்னால் பெரும்பாலான மாநில அரசுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் வரும்போதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் ஓடத் தயாராகி விடுகின்றன.
அரசுகள் தரும் இலவசங்களுக்கு ஒருவேளை எதிர்காலத்தில் சில கட்டுப்பாடுகள் வரக்கூடும். ஆனால் ஒருபோதும் முற்றிலுமாகத் தடை விதித்து விடமுடியாது என்பதே நிதர்சனம்!