சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே இந்தியாவில் நிர்ணயம் செய்து கொள்கின்றன.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகிறது. ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 1ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று ரூ.1,118.50-க்கு விற்பனை ஆனது.
இந்த நிலையில், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக தற்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
ஆனால், இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
எனவே தேர்தலை மனதில் வைத்தே வாக்காளர்களை கவரும் விதமாக விலை குறைப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்து இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். தேர்தலுக்காக ஒன்றிய அரசு பொது மக்களிடம் வியாபாரம் செய்கிறது. 5 மாநில தேர்தலுக்காக சிலிண்டர் விலையைக் குறைத்து நாடகமாடுகிறது ஒன்றிய அரசு
என்றும் ஒன்பதரை வருடங்களாக சாமானியனின் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டே இருந்தார்கள், அப்போது ஏன் எந்த ஒரு பாசப் பரிசும் நினைவுக்கு வரவில்லை? உங்கள் பத்தாண்டு கால பாவங்கள் கழுவப்பட முடியாதது
என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்தார். சிலிண்டர் விலை குறைப்புக்கு இந்தியா கூட்டணி ஏற்படுத்திய பயமே காரணம் என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை ஒருபுறம் முன்வைத்தாலும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு பொதுமக்களுக்கு குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியே.
எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படுவதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவு ஓரளவு குறையும் என்பதில் சந்தேகமில்லை.
விமர்சனங்களைத் தாண்டி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் அறிவிப்பை மக்களின் பக்கம் நின்று வரவேற்போம்.
பிரதமர் மோடிக்கு நன்றி கூறுவோம்!