குழந்தை பருவத்திலேயே, பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும் போக்கு நம்முடைய தமிழகத்தில் ஆங்காங்கே இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால், அவர்களது சமூக வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களது அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுப் போகின்றன.
அதுமட்டுமல்ல, ஒரு குழந்தையே, இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பதால், பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளாக பிறந்துவிடுகின்றன. இதனால், கருவுற்ற குழந்தையும் பாதிப்புகளுக்கு உண்டாகும் நிலைமையும் ஏற்பட்டுவிடுகின்றன.
குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் வலுவாக இருந்தும்கூட, குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் முற்றிலுமாக குழந்தை திருமணத்தையும், 18 வயதுக்கு முன்பேயே பெண் குழந்தைகள் தாயாவதையும் தடுக்க முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்திலேயே, நெல்லை மாவட்டத்தில்தான், 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார்களுக்கு அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி, பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இம்மாவட்டத்தில் 2021 ஜனவரி தொடங்கி 2023 அக்டோபர் மாதம் வரை 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார்கள் 1448 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெற்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அதிலும், மேலப்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மட்டும், அதிகபட்சமாக 88 சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்களாம். மானுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 பெண் குழந்தைகளும், வன்னி கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 43 பெண் குழந்தைகளும், குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இது கவலை அளிக்கும் செய்தியாகும்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதற்கு 2 விதமான காரணங்களையும் சொல்கிறார். முதலாவதாக, பள்ளி கல்லூரிகளில் இடைநிற்றல் என்பதே மிகபெரிய காரணமாகிறது..
அடுத்ததாக, 18 வயதிற்கு முன்பே திருமணம் நடத்தப்படுவதும் சிறுவயது குழந்தைப் பேறுக்கு காரணமாக அமைகிறது என்கிறார். நெல்லை மாவட்டத்தில் பரவும் இந்த சிறுமிகள் பிரசவம் விவகாரம் பிற மாவட்டங்களிலும் இல்லாமல் இருக்காது. இதனைச் சட்டப்படி தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உண்டு.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும். பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்காததால் தான் சிறு வயதில் தாய்மையடையும் நிலை அதிகரிப்பதாக வெளியான புகாரையும் உதாசீனப்படுத்திவிட முடியாது.
குழந்தை திருமணத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மிகவும் அவசியம் – அவசரமாக மாறிஇருப்பதையே இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.
பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை குறித்த பாடங்களை பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலம் குழந்தைத் திருமணங்களையும், குழந்தை மகப்பேறுகளையும் தடுக்க முடியுமா? என்பதையும் அரசு ஆராய வேண்டும்!